தட்டச்சு பழகுகிறேன்…

அங்கிட்டு..இங்கிட்டு..போறப்ப..வாறப்ப..timepass..பண்ண‌

Tag Archives: பொது

நன்றி… இதையும் மீள் பதிவா போடுவோம்ல

ராகிங், என்ற பகடி வதை…?!?

யூனிவர்சிட்டியில சேரும் போதே ஒரு முடிவோட‌ இருந்தேன். ராகிங்ல என்ன கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டாலும் அத தவறாது நிறைவேற்றிவிடுவதுன்னு.

“பாட்டு பாடு”

“டான்ஸ் ஆடு”

“இவன அடி”

“தோப்புக்கரணம் போடு”

“தரையில படுத்து நீச்சல் அடி”

“தீக்குச்சிய வச்சி அளந்து காட்டு”

“இந்தா, தம் அடி”

“சரக்கு அடி”

இப்டி எல்லாமே, சின்னபுள்ளத்தனமா தான் இருந்திச்சு. ஏற்கனவே வடிவேலு மாதிரி மையிண்ட் செட் ஏற்படுத்திக்கிட்டனால, என்ன சொன்னாலும் செஞ்சேன், எவ்வளவு அடிச்சாலும், வாங்கிகிட்டு ஈஈஈஈஈன்னு பல்ல காட்னேன்.

ஏண்டா உனக்கு சொரணயே இல்லையான்னு, கேக்காதீங்க….

இப்படி ஒரு ஜூனியர்வாச்சா, எப்பிடி இருக்கும் சீனியர்க்கு; ஒரே வாரத்துல, “சீ, உன்ன யார்ரா ராகிங் பண்ணுவா”ன்னு காரி துப்பிட்டு மத்தவனுங்கள மேயிக்க போயிட்டானுங்க.

அப்பாடா எல்லாரையும் சமாளிச்சாச்சுன்னு சந்தோசம சுத்துனேன்.

கிட்டதட்ட ஒரு மாசத்துக்கு அப்புறம் தான் முக்கியமான 3 பேர்கிட்ட மாட்னேன்.
இவனுங்க கிட்ட மாட்டுனதுக்கு தினைக்கும் மூணுவேள அடி வாங்கலாம்.

மொத ஆளு:
இந்த சீனியர் அடிக்கவோ, திட்டவோ மாட்டான். ஆளு பொன்னம்பலத்துக்கு பங்காளி மாதிரி இருப்பான். லேசா தொண்டய செருமுனா போதும், டர் ஆயிரும்.
சனிக்கிழம, ஞாயித்திகிழம இவன் ரூமுக்கு இழுத்திட்டு போயி ஒரு முலையில நிறுத்தீருவான். அவ்ளோ தான்.
 
அவன் பாட்டுக்கும் அவன் வேலய பாத்துகிட்டிருப்பான் (பயபுள்ள பாடபுஸ்தகத்த படிப்பாங்க, கோவில் குருக்களாட்டம், முணுமுணுன்னு). ரூம்ல, பாட்டு பாடாது, போஸ்டர் கூட இருக்காது. அந்த ரூமுக்கு வர்றவனுகளும் நம்மள கண்டுக்க மாட்டாங்க (அப்புறம் நம்ம எதுக்கு அங்கனகுள்ள‌). ராத்திரி 11 மணிக்குத்தான் ரிலீஸ் பண்ணுவான்.

அவ்ளோ நேரமும் சும்மா நின்னுகிட்டே இருக்கணும், பேசக்கூட தடா. (ஈஸியா தெரியிதா, ஒரு நா நின்னுபாத்து, சொல்லுங்க). ஆனா, மதியம் சாப்புட நல்லா வாங்கி தருவான்; பிரியாணி, நான்வெஜ்ன்னு (பெரிய, வள்ளலாட்டம்). அதுக்கப்புறமும் நிக்கணும், எப்டி முடியும். கண்ணு சொருகும், தூக்கம் அழுத்தும். அந்நேரம் பாத்து பாசமா ஒரு ஸ்மைல் பண்ணுவான் பாருங்க……. “டேய், ரெண்டு அடியாவது அடிச்சிட்டு விட்றா”னு மனசு கெஞ்சும்.

ரெண்டாவது ஆளூ:
இவனோடதும் (அ)கிம்ச தான். ராத்திரி மெஸ்ல‌தான் இவன் ஆள் புடிப்பான். பக்கத்துல உக்காந்து பாசமா ஆரம்பிச்சி, கொஞ்ச கொஞ்சமா மிரட்டுவான். எதுக்கா? தயிர் சாதம் திங்க சொல்லி. மெஸ்ல டெய்லி ராத்திரி தயிர்சாதம், அன்லிமிடெட். அதுக்காக, எவ்ளோ சாப்ட முடியும். கொஞ்ச நேரத்துல வயிறு கிழிஞ்சிருமோன்ற நெலம வந்தபொறகு தான், சாப்பாட்ட நிறுத்த விடுவான். அதுக்கப்புறம் தான் அவன் சாப்பிட ஆரம்பிப்பான். அவன் முடிக்கிறதுக்குள்ள, இங்க மேல்வயிறு, கீழ்வயிறு எல்லாம் நிரம்பி, அடி வயிறு நெருக்கும் பாருங்க, மரண அவஸ்தங்குறது அதான் (காமன் டாய்லட்டுக்கு க்யூல நிக்காதவங்களுக்கெல்லாம் இது சொன்னா புரியாது).

அவன் கைய கழுவுனதுலயிருந்து அஞ்சு நிமிசம் தான் டைம். “எல்லாத்தையும் முடிச்சிகிட்டு”, நம்ம புஸ்தகத்த தூக்கிகிட்டு அவன் ரூம்ல ஆஜர் ஆகணும்.
“படி தம்பி, படி”ன்னு அவனுக்கு தூக்கம் வர்றவரைக்கும் நம்மள படிக்க சொல்லி உசுரவாங்குவான். (பெத்தவங்க படின்னு சொன்னதையே கேக்காம உருப்படாம போனவங்க நாம. நம்மள பாத்து எப்படி சொல்லலாம் அவன், “படி”ங்கிற கெட்ட வார்த்தய).

படிச்சிட்டேன்னு சொன்னா, பதில் சொல்ல முடியாத கேள்வியாகேட்டு, மறுபடியும் படிக்க சொல்லுவான்.  “படிக்கதான தம்பி வந்த, படிப்பா தம்பி”ன்னு அரைமணிக்கு ஒரு அட்வைஸ் வேற. இதுல வயிறு நெறய இருக்குற தயிர்சாதத்தோட எபெக்ட், ஸ்ஸ்ஸ் அப்பா, நெனச்சாலே கண்ண கட்டுது.

எப்படியும் மூணு மணிக்குத்தான் ரிலீஸ் பண்ணுவான். அதுக்கப்புறம், எங்க தூங்குறது. கொட்டாவி சத்தமும் கோழி கூவுற சத்தமும் ஒண்ணா இருக்கும்.
இது ஒரு  நா கத இல்ல. ஒருத்தன புடிச்சான்னா, தொடர்ந்து ரெண்டு வாரத்துக்கு, அவன் விடமாட்டேன். இந்த பொழப்புக்கு, “செருப்பால கூட நாலு அடி அடிச்சிட்டு போடான்னு இருக்கும்”.

வீட்லயிருந்து ஃபோன் வந்தப்ப இவனுகள பத்தி கம்ளெயிண்ட் பண்ணா, எதிர் மொனையில தெருவே சிரிக்குது, speaker phone புண்ணியத்துல. எக்ஸ்ட்ராவா அட்வைஸ் வேற. “ஏண்டா, சும்மா நிக்க சொல்றதையும், நல்லா சாப்புடவோ இல்ல படிக்க சொல்றதையும் கம்ளெயிண்ட் பண்ற. நல்ல பசங்களா இருக்காங்க, அவனுக கூட சேந்து, அப்டியாவது படிச்சி உருப்படு.”

முணாவது ஆளூ:
இவன் மத்தவங்கள மாதிரி நாள் கணக்குல‌, வார கணக்குல படுத்த மாட்டான்.
ஒரு நாளைக்கு பத்து பசங்க தான், அதுவும் அவன் கண்ல சிக்குற முதல் பத்து பேருக்குத்தான் அந்த பாக்கியம். மாலை நேரங்களில் ஹாஸ்டல் வாசல்ல நிப்பான். (ஹாஸ்டல் யுனிவர்சிட்டியின் மெயின் கேட்டுக்கு செல்லும் பாதையில் இருந்தது. அதாவது, நம்மள தாண்டி தான் சாயங்காலம் யாரும் வெளிய போக முடியும்).

1. சட்டய கழட்டி inside outஆ மாட்டிக்கோ.
“எஸ் ஸார்”
2. பேன்ட்ட கழட்டி inside outஆ மாட்டிக்கோ.
“எஸ் ஸார்” (அறுனாகொடிக்கு நன்றி‌)
3. பனியன் எங்கடா? சட்டைக்கு மேல மாட்டு.
“எஸ் ஸார்”
4. இப்ப எல்லாரோட வாட்சையும் கழட்டி வரிசைல முதல்ல நிக்கிறவன் ரெண்டு கைலயும் மாட்டு
“எஸ் ஸார்”
5. இந்த டைம்பீஸ அவன் நெத்தியில மாட்டு
“எஸ் ஸார்”
6. நீ, இப்ப கார் ஓட்டு (சின்னபுள்ளைல வெளான்டிருப்பமே, பசங்க படத்துல வர்ற மாதிரி)
“எஸ் ஸார்”

7. அப்டியே போயி அவகிட்ட (அந்த நேரத்தில எந்த பொண்ணு வந்துகிட்டிருக்கோ) டைம் மேனஜ்மென்ட் பத்தி ஒரு நிமிஷம் லெக்சர் கொடுத்திட்டு, இந்த பேப்பர்ல “you are simply superb”ந்னு எழுதி அவ ஸைன் வாங்கிட்டு வா.

சாயங்காலம் வீட்டுக்கு போற மகராசி, எவ நின்னு டைம் மேனஜ்மென்ட் பத்தி லெக்சர் கேப்பா, அதுவும் சூப்பர்மேன்கிட்ட. “அக்கா, சீனியர், மேடம்”னு கெஞ்சிகிட்டே போகணும்.

சில புண்ணியவதிங்க வேணும்னே மெயின் கேட் வரைக்கும் இழுத்தடிப்பாங்க. (ஒருவேள நம்மள அந்த கெட்டப்புல இன்னும் நெறய நேரம் பாக்கணும்ங்ற ஆசையாக்கூட இருந்திருக்கலாம் :‍))).

எது எப்படியோ. நல்ல வேள, அப்பெல்லாம் கேமரா மொபைல் கெடயாது :‍‍‍)

ஆனா, அடுத்த வருசம் ஜூனியர்கள எல்லாம் வரிசையா
நிக்க வச்சி,
நிக்க வச்சி,
நிக்க வச்சி…..
(ஓண்ணும் செய்ய முடியலங்க. ஆன்டி ராகிங் ரூல்ஸ் ஸ்டிரிக்டா இம்பிளிம்ன்ட் பண்ட்டாங்க‌)

Picture courtesy: http://www.tribuneindia.com/2006/20060718/delhi.htm

வரதட்சணை,….கொடுமை !?!

இனி பொறுக்க முடியாதுங்க.

நானும் பாத்துக்கிட்டே இருக்கேன், இந்த பிரச்சனைக்கு யாரும் ஒரு counter கொடுக்குற மாதிரி தெரியல. அட பொண்ணுங்கள இந்த விசயத்துல நம்ப முடியாது, உண்ம தான். ஆனா இந்த பசங்க. ம்ஹூம், வேஸ்ட் ஃபெளோஸ்.

ஆனா, நான் மானஸ்தன்ய்யா.
விடமாட்டேன்.

பிரச்சன இது தாங்க, எந்த ஆல மரத்தடியில வரதட்சண பத்தி கூட்டம் போட்டாலும், உடனே இந்த பொண்ணுங்க, ” நாங்க பணம் கொடுத்து பையன வாங்குறோம்”, அதாக்கும், இதாக்கும்னு வரதட்சண கொடுக்குறத பத்தி ஓவரா சவுண்ட் விட வேண்டியது.

வரதட்சண கொடுத்துட்டா அதுக்காக எந்நேரமும் தலையில தூக்கிவச்சிக்கிட்டு ஆடணுமா, என்ன.

(Excuse me பொண்டாட்டி மேடம். கொஞ்சம் என் தலையுல இருந்து ஒரு நிமிசம் கீழ இறங்குனீங்கன்னா, கழுத்துல சொடக்கெடுத்துப்பேன். Thank you, பொண்டாட்டி மேடம்.)

நான் மானஸ்தன்ய்யா.
நான் இதுக்கு ஒரு பதில கண்டுபுடிக்காம விடமாட்டேன்.

பகல் முழுக்க‌ பரங்கிமல மேல மல்லாக்கா படுத்து யோசிச்சேன்.
இராத்திரி முழுக்க முக்காடு போட்டு உக்காந்து யோசிச்சேன்.

அஃக, புடிச்சோம்ல……counteru…

குடும்பங்குற institutionல மெரிட்ல அட்மிசன் கெடைக்காம management quotaல captitation feeச கட்டி அட்மிட் ஆகுற ஆளுங்கய்யா இவங்க. என்ன தான் captitation fees கட்டுனாலும், institution சொல்றபடி obedientட்டா இருந்தாதான் உருப்பட முடியும். அத விட்டுட்டு சும்மா, capitation fees கொடுத்தேன், வரதட்சண‌ கொடுத்தேன்னு கூவுனா,…

எப்பூடி…

இனி பல்லுமேல நாக்க போட்டு,
மெரிட்ல குவாலிஃபையாகமுடியாத இந்த பொண்ணுங்க
ஆம்புளைங்கள பாத்து எதுனா சவுண்ட் விட்டா,
பொறுக்க மாட்டான் இந்த மானஸ்தன்.

ஹா….ஹா…ஹா…..

(ஐய்யோ….ஐயோ…ஐய்யோ
உணர்ச்சிவசப்பட்டேனே உணர்ச்சிவசப்பட்டேனே.

ஏற்கனவே கட காத்து வாங்குது,
இதுல தப்பித்தவறி இந்த பக்கம் வர்ற தாய்குலங்களும்
இத பாத்தா டென்ஷனாயிடுமே.

ஆ..ஆ…ஆ…பொண்டாட்டி மேடம்,
நீங்க எப்படி இந்த பக்கமா………….
Re-Recording sound….. ணங் ணங் ணங் ணங் ணங் ணங் ணங் ணங் ணங் ணங் )

ப்ளீஸ், உங்க எல்லார்கிட்டயும் ஒரு சுமால் ரெக்குவஸ்ட்டு. ஒரு ரெண்டு வாரத்துக்கு பழைய சாதத்த கழனிப்பானையில ஊத்துறதுக்கு முன்னாடி ஒரு தடவ வாசல் பக்கம் இந்த மானஸ்தன் இருக்கானான்னு ப்ளீஸ் ஒரு எட்டு பாத்துடுங்க………

டிஸ்கி: இது முழுக்க, முழுக்க புனைவு. வெறும் நகைச்சுவைகாக மட்டும்.
(ஆ… உமி வச்சி ஒத்தடம் கொடுத்தும் மண்டையில வீக்கம் வத்தலயே)

Picture without dialouges, courtesy: http://www.chinasmack.com/2008/stories/married-for-1-year-beaten-by-wife-9-times.html

எனக்கு எப்ப கல்யாணம் நடக்கும்….???

கல்யாண வயசு பசங்களா (Boys & girls) நீங்க?
(என்னது முத்துன கத்திரிக்காயா நீங்க;
நோ ப்ராளம், நீங்களும் படிக்கலாம்).

நமக்கு, எப்ப கல்யாணம் நடக்குமோன்னு நீங்க பயந்துகிட்டிருக்குற ஆளா, இல்ல‌
நமக்கு, எப்ப கல்யாணம் நடக்குமோன்னு பெருமூச்சு விடுற டைப்பா,
எதுவா இருந்தாலும் வாங்க உங்க கல்யாணம் எப்ப நடக்கும்ன்னு உடனே தெரிஞ்சிக்கலாம்.

முதல்ல கேள்விக்கெல்லாம் பதுல சொல்லுங்க..
(எத்தனை அ/ஆ/இ தெரிவு செய்றீங்கன்னு கணக்கு வச்சிக்கோங்க‌).

உங்க வயசு என்ன?
அ. 20 -‍ 25
ஆ. 25 – 30
இ. 30 <

உங்க லைஃப் பார்ட்னர் பாக்க எப்படி இருக்கணும்?
அ. சினி ஸ்டார், Page 3 ரேன்ஜ்ல
ஆ. அழகுன்னு சொல்ல முடியாட்டியும், லட்சணமா இருக்கணும்
இ. okன்னு சொல்ல முடியாட்டியும், பயந்து கண்ண மூடிக்கிற அளவுக்கு இல்லாம இருக்கணும்

உங்க லைஃப் பார்ட்னர் எவ்ளோ படிச்சிருக்கணும்?
அ. என்னை விட அதிகமா இல்ல என் அளவாவது
ஆ. எதாவது ஒரு டிகிரி
இ. எழுத படிக்க தெரிஞ்சா போதும்

உங்க லைஃப் பார்ட்னர் எவ்ளோ சம்பாதிக்கணும்?
அ. என்னை விட அதிகமா இல்ல என் அளவாவது
ஆ. என் சம்பளத்தில் அட்லீஸ்ட் 1/3
இ. சம்பாதிப்பது முக்கியமில்லை. பணத்தின் அருமையும், சேமிக்கும் திறமும் போதும்.

உங்க லைஃப் பார்ட்னர் எந்த ஊருல இருக்கணும்?
அ. நான் இருக்கும் ஊரிலேயே
ஆ. நான் இருக்கும் ஸ்டேட்டிலாவது
இ. கிரக்கோஷியானாலும் சரி தான்.

உங்க லைஃப் பார்ட்னர் எதை சேர்ந்தவரா இருக்கணும்?
அ. ஒரே மதம், ஒரே ஜாதி, ஒரே உட்பிரிவு / ஒரே கொள்கை, ஒரே கோஷ்டி
ஆ. ஒரே மதம் / ஜாதி / கொள்கை இருந்தா போதும். உட்பிரிவு, கோஷ்டி பத்தி கவலயில்ல.
இ. எதையும் சேராதவரா இருந்தாலும் ஒகே தான்.

உங்க லைஃப் பார்ட்னரின் நிறம்?
அ. பூமி தொடா பிள்ளையின் பாதம்
ஆ. மத்திம‌ நிறமாவது
இ. திராவிட நிறமே கருப்பு தான்

உங்களுக்கும் உங்க லைஃப் பார்ட்னர்க்கும் வயசு வித்தியாச எதிர்பார்ப்பு
(ம.மகன் வயசு -‍ ம.மகள் வயசு = )?
அ. அதிகபட்சம் 2 ஆண்டுகள் 364 நாட்கள்
ஆ. 6 வருஷம் பெரிய வித்தியாசமில்ல‌
இ. 9 வருஷம் தான, பரவாயில்ல‌

உங்க லைஃப் பார்ட்னரின் குணம் / நடத்தை பற்றிய எதிர்பார்ப்பு?
அ. யோக்கியம் நெம்பர் 1. (தரச்சான்றுடன்)
ஆ. ரொம்ப யோக்கியம்மா யாருமே இருக்கமுடியாது
இ. கல்யாணத்துக்கு அப்புறம் ஒழுங்கா இருந்தா போதும்

வரதட்சணை….
(பெண்கள் இந்த கேள்விக்கான விடைகளை கீழிருந்து மேலாக மாற்றிக்கொள்ளவும்)
அ. As per present market trend
ஆ. பொண்ணு வீடா பாத்து ஏதாவது / என் சகோதரிக்கு செய்த அளவு
இ. மூச்…என்ன பேச்சு சின்னபுள்ளதனமா

முடிவுகள்:

1. மிக அதிகமாக "அ" வை தெரிவு செய்தவர்கள்: உங்களுக்கு நெனப்பு ரொம்ப ஓவரா இருக்கு. கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் உங்களுக்கு கல்யாண ப்ராப்தமே கிடையாது. அதுக்கு முன்னாடி குருட்டு யோகத்துல யாராவது இளிச்சவாய் உங்ககிட்ட ஏமாந்தாதான் உண்டு. ‌முடிஞ்சா திருந்தப்பாருங்க‌.

2. மிக அதிகமாக "ஆ" வை தெரிவு செய்தவர்கள்: உங்களுக்கு நல்ல மனபக்குவம் வர ஆரம்பிச்சிருச்சு. கூடிய சீக்கிரம் வரன் அமஞ்சிடும். முடிஞ்சா "இ" யை, இன்னும் சில கேள்விங்களுக்கு தெரிவு செய்ங்க.

3.மிக அதிகமாக "இ" யை தெரிவு செய்தவர்கள்: என்ன!!!! உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா?????? ஹீம். இந்த அறிவு அஞ்சு வருசம் முன்னடியே இருந்திருந்தா கூட, இப்ப புள்ளய ஸ்கூலுக்கு அனுப்பியிருக்கலாம்ல? வருத்தப்படாதீங்க‌, எல்லா கேள்விக்கும் "இ"யையே தெரிவு செய்ங்க, கல்யாண யோகம் வரும்.

நீதி:

"கல்யாண யோகம்"கிறது பீக் ஹவர்ல வர்ற வண்டி மாதிரி. நம்ம தராதரத்துக்கு ஏத்த மாதிரி டவுண் பஸ்ஸோ, ஆட்டோவோ, டாக்சியோ வர்ற முத வண்டியில ஏறி போயிட்டே இருக்கணும். கூட்டமா இருக்கு, வசதியா இருக்காதுன்னு குத்தம் பாத்துக்கிட்டிருந்தா, அங்கயே நிக்க வேண்டியது தான்.

காலம் போயிட்டே இருக்கும்…..

அதுக்கப்புறம், மொத பஸ்லேயே அட்ஜஸ்ட் பண்ணி போயிருக்கலாம்ன்னு, புத்தி வந்தாலும் பிரயோஜனம் இல்ல.

இரட்டை அர்த்த கவித…

நான் பாட்டுக்கும் சம்மா தாங்க இருந்தேன்.
(ஹலோ, உங்க மயிண்ட் வாய்ஸ்ஸ‌ ஆஃப் பண்ணுங்க.
“நீ என்னைக்கிடா சும்மா இருந்த”,ன்னு நீங்க நெனைக்குறது, எனக்கு நல்லா கேக்குது).

வேல்தர்மாவோட (நெருப்பணை) firewall இல்லாமல் தாயானாள், பாத்தேன். நல்லா இருந்துச்சு. சரி அப்டியே நாமளும் ஒரு ட்ரை பண்ணி பாப்பமேன்னு எழுதுனது தான் இந்த வசனம்…ச்சி..ச்சி…கவித.

நெருப்பாய் அணைக்கையில்
மஞ்சத்தில்
நெருப்பணையை மறந்திட்ட‌
நெஞ்சத்தில்

தவிப்புகள் தளரும் வரை
தரச்சான்றும் தேடார்
தாய் யார், தந்தை யாரென‌
தகவலும் வேண்டார்

தரவிறக்கமே சொர்க்கம்

தரம் இறங்கியது செயல்படின்
தரித்திரமே நிதர்சம்
தர்க்கமே மிச்சம்

இந்த வரிங்கோ, firewall protection இல்லாத லேப்டாப்ல கண்ட சைட்டுக்குபோய் cracked software download பண்ணி, அது execute ஆகசோலோ laptop பணால் ஆயிடுமே, அத பத்தி எழுதுனதுப்பா.

இத்த நானு, கூடாபுணர்தல (கூடாபுணர்வ) ‍மனசுல‌ வச்சு எழுதலன்னு சொன்னா நீ என்ன நம்பவாபோற…

{கூடாபுணர்தல் (கூடாபுணர்வு) ‍ ஹைய்யா, தமிழ்ல புது வார்த்தைய கண்டுபுடிச்சிட்டேன். அதில்லயும், அந்த வார்த்த அமைப்ப பாருங்க. கூடாம புணரமுடியுமா? ஆனா “வேண்டா”ன்னு பொருள் வர்றதுக்கு “கூடா”தான நல்ல முன் ஒட்டு; கூடா நட்பு, கூடாவொழுக்கம் மாதிரி. இந்த மாதிரி வார்த்தைங்கள literature மக்கள் ஏதோ சொல்லி வகைப்படுத்துவாங்க. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க}.

(Picture courtesy: http://thetruthfulman.files.wordpress.com/2009/09/couple-laptop2-lg-new.jpg&imgrefurl=)

என் திருக்குறள் சந்தேகமும், இளையராஜாவின் உரையும்…

இது எனக்கு போறாத காலமா, இல்லை உங்களுக்கெல்லாம்மான்னு எனக்கு தெரியவில்லை.
ஆனா, என் பல நாள் சந்தேகங்கள் தீர்கின்றன / உறுதி பெறுகின்றன.

நான் பாட்டுக்கும், தேமேன்னு சந்தேகத்த என்னோட வச்சிக்கிட்டுதாங்க இருந்தேன்.
ஆனா, பாருங்க; அப்பத்தான் கொஞ்ச நாளு அத மறந்திருந்தேன், ஆனா ஏதோ ஒரு போரம்ல அதே சந்தேகத்த யாரோ கிளப்பிவிட்டு, நியாபகப்படுத்துனாங்க.

சரி, அந்த போரத்துலயாவது சந்தேகம் தீரும்னு பாத்தா அது வள்ளுவர் கொண்டையாட்டம் உறுதியானது தான் மிச்சம்.

டவுட், இதானுங்க.
as usual, திருக்குறள்ல.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
(குறள் 110, அறத்துப்பால் – இல்லறவியல் – செய்ந்நன்றி அறிதல்)‌

இதுக்கு, எந்நன்றி அப்படீன்னா ‍எத்தனையோ வக நன்றி / நன்மை இருக்கு, அதுல எந்த வக
நன்றி / நன்மையாக இருந்தாலும் அதையெல்லாம் அழித்தவர்க்கு/மறந்தவர்க்கும் உண்டாம் உய்வு (அதாவது மன்னிப்பு / நல்வழி).

ஆனால், ஒருவர் செய்த நன்றி / நன்மையை மறந்த மகற்கு (அதாவது மக்களுக்கு) மன்னிப்பே / நல்வழியே கிடையாது. அப்பட்டீன்னு தான் (கிட்டதட்ட) எல்லாரும் சொல்லி வர்றாங்க.

நன்றியோ/ நன்மையோங்கிறதே ஒருத்தவங்க அடுத்தவங்களுக்கு செஞ்சாத்தான் உண்டு. தனக்குத்தானே செஞ்சிக்கிறதப்பத்தி பேச என்ன இருக்கு, இல்லையா.

அப்ப எங்கயோ பொருள் இடிக்குது.
இதுதாங்க என் பல நாள் டவுட்.

உற்றவன்…… குறள் மாதிரி இதுக்கு எனக்கு பொருள் உணர முடியல.
போரத்துலயும் விட கிடைக்கல.

ஆனா, அதிர்ஷ்ட வசமா, விட புலவர் முத்துலிங்கம் பேட்டி (திரும்பிப் பார்க்கிறேன், ஜெயா டிவி) வழியா கிடச்சது.

நம்ம, இளையராஜாவுக்கும் இதே டவுட் இருந்திருக்கு.
(ஹ…ஹ…டவுட்டாலஜில இப்ப நம்ம ரேன்ஜ் தெரியிதுங்களா)

புலவர கேட்டதுக்கு, “எனக்கு தெரியலயே”ன்னு சொல்லிட்டாராம்.

அப்புறம், இளையராஜாவே சொன்ன விளக்கம் என்னாண்ணா,
” நன்றிங்கிறதே அடுத்தவங்க செய்யிறது தான்.
இந்த குறள்ல “மகற்கு”ங்கிறத மக்கள்னு பொருள் பாக்குறப்ப,
நாட்டு மக்கள்னு பொருள் கொள்ளாம வீட்டு மக்கள் (அதாவது பிள்ளைகள்)
அப்படீன்னு பொருள் கொள்ளனும்.

இப்படி பாத்தா,
எந்த வக நன்றி / நன்மையாக இருந்தாலும் அதையெல்லாம் அழித்தவர்க்கு/மறந்தவர்க்கும் உண்டாம் ம‌ன்னிப்பு / நல்வழி. ஆனால், தன்னை பெற்று, வளர்த்த பெற்றோர் தனக்கு செய்த நன்றியை / நன்மையை மறந்த பிள்ளைகளுக்கு மன்னிப்போ / நல்வழியோ கிடையாது.”
அப்படீன்னு விளக்குனாராம்.

இதப்பத்தி நம்ம மயிலை மன்னார் அய்யாவுக்கு என்ன படுதுன்னு திரு. VSK அவர்கள‌ முதல்ல கேட்டிருவோம்.

இல்லறவியல்ல இந்த குறள் வர்றனால இந்த interpretation, ஏத்துக்கொள்ளப்படக்கூடியது தான்னு எனக்கும் படுது.

உங்களுக்கு என்ன படுது.

(ஏண்டா படுத்துறன்னா….?)

(Picture courtesy: http://www.nallpro.com/tamil/att1/ilayaraja.jpg)

ப்ரியா,……வெட்கப்பட்டாள்

“இப்ப அவ காலேஜ் பஸ்ல வந்துகிட்டிருக்காளாம். நம்ம ஸ்டாப்புல அவ இறங்குனதும் நீயா போய் அவகிட்ட பேசுறயா இல்ல, அவளே வந்து பேசணுமான்னு ப்ரியா கேக்குறா”.

பேசுறதெல்லாம் பேச்சாகாதுங்க‌.
அடுத்தவன் கதைய கேட்டு சும்மா பொறாமபடாதீங்க‌.
பேச்சவச்சித்தான் ஒவ்வொருத்தருடைய‌ வாழ்க்கையே நகருது.
அதுனாலதான் எல்லா டீலிங்கும் எல்லாராலயும் பண்ணமுடியறதில்ல‌.

பேசுறதபத்தி வள்ளுவர் சொன்ன குறளுக்கு உர என்னான்னா,…
(வேணாம், மயிலை மன்னார சும்மா, சும்மா டிரபுள் பண்ணக்கூடாது.)

இப்ப என் கதைய கேளுங்க….

அது, ஒரு அழகிய UG காலம்.

ப்ரியா, எங்க காலனி பொண்ணு.
ப்ரியா = ஈகோ : சேட்ட.
(அதென்னமோ, ப்ரியான்னு பேரு இருக்குற பொண்ணுங்க எல்லாம் சேட்டகாரிங்களாத்தான் இருக்காங்க, எனக்கு தெரிஞ்ச வரைக்கும்.)

காலனியில நிறைய பசங்க கார்ட், ரோஸோட அவ பின்னாடி சுத்துனாங்க. எங்க குருப்புல என்னத்தவுற எல்லாரும் அவகிட்ட பிலிம் விட பாத்து, தோத்தவனுங்க. ஆனா, அவ விட்ட நக்கல்ல எல்லா பயல்களும் தலைவி(தி)யேன்னு சரண்டர் ஆயிட்டாங்க‌‌.

நாங்க இருந்த தெருவில தான், அவ வீடு. அதுவுமில்லாம, எங்க குருப்பு பசங்க ரெண்டு பேரு, காலேஜ்ல அவ லேப் பார்ட்னர்ஸ். இவனுங்க நல்ல பேரு வாங்குறதுக்காக போட்டி போட்டு அந்த தெய்வத்துக்கு சமமா உண்ம பேசுனதுல; எங்க கொள்ளுத்தாத்தாங்க கம்மங்காட்டுக்கு போனதுல இருந்து இன்னைக்கு எவனுக்கு கான்ஸ்டிபேஸன் பிரச்சன இருந்தது வர, அவ எங்களபத்தி up to date ஆ இருப்பா.

காலனி பேக்கரில எங்க குருப்பு இருக்குறத பாத்து அவ வந்தான்னா,
நா அந்த இடத்தவிட்டு எப்படியும் எஸ்ஸாயிருவேன்.

நா அவகிட்ட பேசாததுக்கு ஒரு காரணம் இருந்திச்சு.

ஏதோ ஒரு ரிட்டையர்ட் பாட்டிக்கு ஒரு நாள் நா ஹெல்ப் பண்ண, அத பாத்து காலனியே என்ன யோக்கியன்னு என் பெர்மிஸன் இல்லாம, அவுட்ரைட்டா declare பண்ணிருச்சு. காலனியே, “யோக்கியன் கம் ஹியர், யோக்கியன் சாப்டாச்சா”னு என்கிட்ட பேசாததுதான் கொறச்சல்.
ஒரு நாள், என் காதுல படணும்னே மொக்க பிகர் ஒருத்தி, ப்ரியாட்ட, “இது சரியான அம்மாஞ்சிடி”ன்னு கமெண்ட் வேற அடிச்சி சிரிச்சா…….

இந்த காலகட்டத்துல, உண்மவிளம்பிங்கள்ள ஒருத்தன் என் கவித/கத நோட்ட‌ ஒரு நாளு எடுத்துகிட்டு போய், ப்ரியாகிட்ட கொடுத்திட்டான். எங்க நாம மாட்டுணோம்னா “இதெல்லாம் கவிதயா/கதையா. கவிதையில என்னா feelingsuuuuu”ன்னு பப்ளிக்ல ரேக்கு ரேக்குனு ரேக்கிடுவாளோன்ற பயம் தான், எனக்கு.

இப்படி நா பம்மிக்கிட்டு எஸ்கேப்பாகிட்டிருக்க, ஆனா, அவ என்னடான்னா,”இவ்ளோ நல்லா எழுதுறான்”, (அது என் கவித/கதய சொன்னாளா இல்ல ‌கையெழுத்த சொன்னாளோ), “எவ்வளவு அமைதியானவனா இருக்கான். Nice person” நு எதையோ சொல்ல, குருப்பு முழுசும் over night ல‌ சூனியம் வச்ச ஷாஜகான் “விஜய்” மாதிரி ஆகிட்டானுங்க.

அதோட ரிஸல்ட் தான் ஓப்பனிங்ல வந்த வார்னிங்/ஆர்ட்ர்.

எப்படியும் இந்த பேக்கரி வாசல்ல நம்ம மானத்த அவ வாங்க போறான்றது, confirmed. சேட்டக்காரி; அவளா வந்து பேசுனா, damage ஜாஸ்தியா இருக்கும். Risk எடுத்து நாமளே பேசிருவோம்னு முடிவு பண்ணேன்.
ஆனா, என்னத்த பேசுறது?
அதான் தெரியல.

உண்மவிளம்பிங்கள தெரியாம கேக்கப்போய், “ஒரு பேப்பர்ல குத்திட்டானுங்களேனு காலைலயிருந்து கடுப்புல இருக்கோம்….”னு அவனுங்க பைக் வீல எத்துனானுங்க. அவனுங்களுக்கு exam result பிரச்சன.

என்ன பேசுறதுன்னு வேற யோசிக்குறதுக்குள்ள,
அந்த பாழாப்போன காலேஜ் பஸ் வேற‌ வந்துரிச்சு.
முத ஆளா அவ இறங்கி, நேரா என்ன பாத்து வர ஆரம்பிச்சிட்டா…..

“பேசுடா, பேசுடா”னு கூட இருந்தவனுங்க உசுப்பேத்துற விட அரண்டு கிடக்குற உள்மனசு படபடக்க; அவள பாத்து, “ப்ரியா….”னு கொஞ்சம் சத்தமாவே கத்திட்டேன்.

அந்த கணம் அவ முகத்துல ஆயிரம் பரவசம், பூரிப்பு, பெரும, சந்தோசம், வெட்கம் (என்ன!!!!!! இவளுக்கு வெக்கப்படத்தெரியுமா????) தெரிஞ்சது. ஆனா, சத்தம் கொஞ்சம் ஜாஸ்தியா போனதுல, whole college bus, bakery, bus stopநு எல்லாரும் எங்களயே பாக்க ஆரம்பிச்சிட்டாங்க.

“அடப்பாவி, யோக்கியன் மாதிரி இருந்தவனா இவன்னு”, எங்க காலனி ஆளுங்க மொறைக்குறதப்பாத்து இன்னும் நா டென்ஷனாக‌,
“ஐயய்யோ, கூப்டுட்டோம், ஆனா அடுத்து என்ன பேசணும்ன்னு யோசிக்கலையே. சொதப்பிடாதடான்னு” உள்மனசு extraவா இன்னும் மிரட்ட,
இந்த குழப்பத்துல volumeம reduce பண்ணாம அப்படியே துணிஞ்சி
பேசிட்டேன், கத்திட்டேன்…….

“ப்ரியா, ரிசல்ட் வந்திருச்சில்ல, எத்தன அரியரு……..”

//பேச்சவச்சித்தான் ஒவ்வொருத்தருடைய‌ வாழ்க்கையே நகருது.
அதுனாலதான் எல்லா டீலிங்கும் எல்லாராலயும் பண்ணமுடியறதில்ல‌.//

(Picture courtesy: inspeech.net/Scholarship/default.aspx)

திருக்குறள்,….தொடரும் சந்தேகங்கள்; (தமிழய்யாவின் சதியா…?)

(திருக்குறள்ல சொன்னது நர்ஸையா, கம்பவுண்டரயா….? என்ற எனது இடுகையின் தொடர்ச்சி)

இந்த அடிப்பொடியானுக்கு திருக்குறள்ல வந்த சந்தேகத்துக்கெல்லாம் நீங்களும் உங்க நண்பர்களும் மெனக்கெட்டுதுக்கு நன்றிங்க.
ரொம்ப மெனக்கெட்ட திரு. VSK & மயிலை மன்னார் அவர்களுக்கும்
ரொம்ப ரொம்ப நன்றிங்க.

ஆனா எனக்குதான் குழப்பம் விட்டபாடில்ல. அதுனால தொடர்றேன்.
எனக்கு இப்ப திரு. VSK & மயிலை மன்னாரை (அட நீங்களும்தாங்க) விட்டா வேற கதி இல்லீங்க.

அதுனால இந்த குறள் சம்ம‌ந்தமா எனக்கிருக்குற எல்லா சந்தேகத்தையும் கேட்டுர்றேங்க.

1. “உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து” குறள்ல கடைசியா வர்ற மருந்து,
practice of medicine, பொருள் படும்னா, அப்ப இந்த குறள்
practice of medicine க்கு introduction மாதிரி ஆகுது.
அந்த மாதிரி வர்றப்ப, மருந்துங்குற அதிகாரத்துல
இது தானே முதல் குறளா வரணும்னு ஒரு சந்தேகங்க‌.

இத விட்டுட்டு,
“மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று”, ங்குறது முதலா இருக்கே.

2. மருந்து அப்படீங்கற அதிகாரத்துல தான இந்த குறளே வருது. அப்ப,
“உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே ” அப்படின்னு முடிச்சாலே பொருள் வெளங்கிடுமே.

இல்லன்னா, அப்பால்ங்குற வார்த்த இல்லாம ……
“உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
நாற்கூற்றே மருந்து”னு
சொன்னாலும், இதுவர பெரியவங்க சொல்ற பொருள் வந்திருதே…….

ஐயன் அவசியமில்லாம வார்த்தய உபயோகப்படுத்தமாட்டாருன்னு
எல்லோரும் நம்புறனால தான் இப்படி அனத்துறேங்க.

3. மருந்துங்குற அதிகாரத்துல வள்ளுவர் அய்யா, முடிஞ்சவரைக்கும்
ஔஷதத்த ஒதுக்கியே தான் வைக்கிறாருன்னு நினைக்கிறேன்.

ஔஷதத்த பத்தி உயர்வா ஒரு குறள் கூட இந்த அதிகாரத்துல இல்ல.

மேலும், “மருந்தென வேண்டாவாம்” அப்படீன்னு பொட்டுல அடிச்ச மாதிரிவேற சொல்லாடியிருக்காரு. அதுனாலயும் தான் எனக்கு குழப்பம் வந்ததுங்க.

இப்ப இந்த 3 பாயிண்டையும் படிச்சபொறவு,

“நோயாளி, வைத்தியரு, மருந்த கொடுக்குறவரு இவங்க மூணு பேரும் வரிசைபடி தங்களுடைய கடமைய குறையில்லாம செய்யிறப்பத்தான், இவற்றையெல்லாம் கடந்து, மருந்துங்குறதே நாலாவதா வந்து தன் வேலய சரியா செஞ்சி சிகிச்சய முழுமையாக்கும்”.

அப்படீங்குற உரை ஏற்புடையதா, இல்லையான்னு சொல்லுங்க ?

தொடர்ந்து சங்கடம் கொடுக்குறதுக்கு மன்னிக்கணும்.

(“டேய், உன்ன யார்றா இப்படியெல்லாம் யோசிக்க சொல்றது”ன்னு டென்ஷனாவுரவங்க, என்ன உட்டுருங்க. கட்டுர முழுக்க “சீதை”ய “சிதை”ன்னு எழுதிவச்சாலும், கோபப்படாம, பொறுமையா எடுத்து சொல்லி, பரிவோட தமிழ் பாடம் எடுத்து, என்ன மாதிரி தத்தாரிங்கயெல்லாம் பாஸாகுற அளவுக்கு முன்னேத்திவிட்ட எங்க பள்ளிக்கூட தமிழய்யாட்ட‌ போய் நியாயம் கேளுங்க. )

சாப்பாட்டு ஆர்வலரா நீங்க….? ரூபாய் ஆயிரத்துக்கு ஆசையா*

வாழ்த்துக்கள். நல்லா சாப்புடுற ஆளா நீங்க‌, சந்தோஷபட வேண்டிய விஷயம் தான்.
அந்த சாப்பாட்டு பத்திதான் இப்ப கேள்வியே.

அடுத்து வர பத்து கேள்வியில எத்தன கேள்விக்கு
கரெக்ட்டா பதில் சொல்றீங்கன்னு பாப்போம்.
இங்க‌ ஆண், பெண், வயசு பாகுபாடெல்லாம் இல்ல.
இந்த கேள்விங்களுக்கு சரியான பதிலா 10/10 வாங்குங்க,
ரூபாய் ஆயிரத்துக்கு ஆசப்படுங்க‌*.

1. அஸ்கா சக்கரை எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?

2. சேமியாவின் மூலப்பொருள் எது?

3. ஜவ்வரிசி மாவு எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
அ. கோதுமை
ஆ. மக்காசோளம்
இ. குச்சிக்கிழங்கு
ஈ. உருளைக்கிழங்கு

4. பருப்புவடை/மசால்வடை/ஆமவடை செய்ய தேவையான பருப்பு எது?
அ. கடலைபருப்பு
ஆ. உளுத்தம்பருப்பு
இ. பாசிப்பருப்பு
ஈ. துவரம்பருப்பு

5. பாசி பயறு/ பச்சைப்பயறுக்கும் பயத்தம் பருப்புக்கும் என்னா relation?

6. ஆழாக்கு படி என்றால் எத்தனை படி அளவு?

7. அப்பளம் செய்ய உபயோகப்படுத்தப்படும் மாவு,…………

8. ராகியின் தமிழ் பெயர் என்ன….?

9. கம்பு. இந்த தானியத்த ஆங்கிலத்துல என்னா சொல்றது?

10. ஆரஞ்சு பழத்த விட 5 மடங்கு அதிகமா vitamin C இருக்குறது எந்த‌ பழத்துல‌ ( நம்ம ஊர்ல பரவலா கிடைக்கிற‌து) ?

சரியான விடைகள்:
1. கரும்புச்சாறுதேய்ங்
2. கோதுமை
3. விடை: இ
4. விடை: அ
5. தோல் நீக்கப்பட்ட பயறு, பருப்பாகிறது.
6. 1/8 படி
7. உளுந்து
8. கேப்பை / கேழ்வரகு
9. Pearl millet
10. கொய்யால (அடிங்க, வார்த்தைக்கு முன்னடி “ங்” சேக்காத).

இப்ப 10/10 வாங்குனவங்கெல்லாம் கைய தூக்குங்க.
* உங்களுக்கெல்லாம் ஒவ்வொருத்தருக்கும் தலா ரூபாய் ஆயிரம் வேணுமா?
ஆச, தோச. “ஆசையா”, “ஆசப்படுங்க”ன்னு தான் சொன்னேன்.
கிடைக்கும், தர்றேன்னு சொல்லலையே.
ஹி…ஹி….ஹி….

திருக்குறள்ல சொன்னது நர்ஸையா, கம்பவுண்டரயா….?

அண்ணே, அண்ணே, எனக்கு வெகு நாளா ஒரு சந்தேகம்ணே…..

எதுலடா….?

திருக்குறள்லதேய்ங்…

பேஷ், பேஷ். அந்த ரேஞ்சுக்கு டெவலப் ஆகிட்டயாடா கண்ணா, நீ…!
OK. proceed. what is your doubt?

திருக்குறள் எண் 950, அதிகாரம் ‍ மருந்து, பால் பொருட்பால்….

டேய், Stop. நான் என்ன சென்ஸஸ் எடுக்க வந்த ஆளா?
கண்ட விவரம் எல்லாம் எனக்கெதுக்கு.
குறள சொல்லு, கேள்விய கேளு.‌

அண்ணே, அதுல வள்ளுவர் என்ன சொல்றார்ன்னா…
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து

இப்ப என்ன இதுக்கு உனக்கு உரை என்னான்னு தெரியணூமா?
kural.muthu.org, போ,
thirukkural.com போ, எல்லார் உரையும் அதுல இருக்கு.

அதில்லதாண்ணே சந்தேகம்.
இந்த குறளுக்கு
கலைஞர் உரை:
நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது.
மு.வ உரை:
நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.
சாலமன் பாப்பையா உரை:
நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும்.
English Explanation:
Medical science consists of four parts, viz., patient, physician, medicine and compounder; and each of these (again) contains four sub-divisions (Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis )

இதுல பாத்தீங்கண்ணா, எல்லாருமே மருத்துவமுறை நாலு வகையாக அமைந்துள்ளதுன்னு சொல்றாங்க.
ஆனா, அந்த நாலாவது வகை கம்பௌன்டர்ன்னு ஒரு சாரரும், நர்ஸம்மான்னு ஒரு சாரரும் பொருள் வர்ற மாதிரி சொல்றாங்களே.
அந்த நாலாவது வக எதுண்ணே…?

அடேய், இப்பத்தான் விஞ்ஞானம் டெவலப்பாயிருச்சி.
அந்த காலத்துல ஏது கம்பௌன்டரு, ஏது நர்ஸம்மாங்க.
முன்னாடி காலத்துல வைத்தியர் கூடவே வர்றவரு மருந்த அரச்சி தருவாரு.
அவர கம்பௌன்டருன்னு சொன்னா அப்ப வீட்ல பக்கத்துல இருந்து கவனிச்சிக்குற ஆளையா நர்ஸுன்னு சொல்றது.
மருந்த வேளாவேளைக்கு சரியான அளவுல சரியான பதத்துல யார் நோயாளிக்கு கொடுக்குறாங்களோ அவங்க தான் அந்த நாலாவது வக.

என்னமோ சொல்றீங்கண்ணே, ஆனா எனக்கென்ன்மோ இந்த நாலு உரையுமே தப்புன்னு தோணுது.

ஏண்டா திருக்குறள்லயே தப்பு, ரைட்டுன்னு சொல்ற அளவுக்கு நீ வந்துட்டயா. சொல்றா என்ன தப்பு?

அண்ணே,
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து,
ங்குற குறள்ல இவங்க எல்லாரும் உற்றவன், தீர்ப்பான், மருந்து, உழைச்செல்வான்னு பிரிச்சி படிக்குறாங்க.
அப்பிடி படிச்சா அப்பால் நாற்கூற்றே ங்கிறதோட மேட்டர் முடிஞ்சிச்சு.
மருந்து ங்கிற வார்த்த எக்ஸ்டிரா ஆகுது.
அப்படியில்லாம உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று,
அப்பால் ‍ அதாவது அதற்கு அடுத்து, அதை கடந்து
நாற்கூற்றே மருந்து ‍‍‍‍‍ நாலாவது வகையே மருந்து.
நோயாளி, வைத்தியரு, மருந்த கொடுக்குறவரு இவங்க மூணு பேரும் வரிசைபடி தங்களுடைய கடமைய குறையில்லாம செய்யிறப்பத்தான்
மருந்துங்குறதே நாலாவதா வந்து தன் வேலய சரியா செஞ்சி சிகிச்சய முழுமையாக்கும்.
இப்படியும் சொல்லலாம்ணே.

என்ன சொல்லலாம், கொல்லலாம். போடா வெட்டிப்பயலே,
அப்புடியே பஸ் ஏறி கோயமுத்தூர் போ.
ரொம்ப பேர் கூட்டம் கூட்டமா வந்திருப்பாங்க.
அங்க போய் சத்தம் போட்டு இத சொல்லு, நல்லா வெளங்க வப்பாங்க.

சரி சரி டென்ஷனாகாதீங்கண்ணே. ஒரு சிம்பிள் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க.
இந்த குறளுக்கு
போப் அய்யா உர மாதிரியேதான் பாப்பைய்யா அய்யா உர இருக்கு.
மு.வ ‌அய்யா உர மாதிரியேதான் கலைஞர் அய்யா உர இருக்கு.
பெருசா வித்தியாசம் இல்லயே. அப்புறம் ஏண்ணே இவங்களும் ….?

அண்ணே அண்ணே ஓடாதீங்கண்ணே,
பதில் சொல்லிட்டு போங்கண்ணே….
பதில் சொல்லிட்டு போங்கண்ணே…
……….

இந்த இடுக ரொம்ப மொக்கத்தனமா இருந்தாலும்,
இந்த குறளக்கு இப்படியும் பொருள் சொல்லலாமான்னு
உண்மையிலேயே ஒரு சந்தேகம் இருக்கு, எனக்கு.

தமிழ் ஆர்வலர்களும், தமிழ் பெரியவங்களும் கொஞ்சம்
இந்த அடிப்பொடியானுக்கு கருத்து சொன்னா நல்லாயிருக்கும்….

(Picture courtesy: http://www.indiaglitz.com)