தட்டச்சு பழகுகிறேன்…

அங்கிட்டு..இங்கிட்டு..போறப்ப..வாறப்ப..timepass..பண்ண‌

Monthly Archives: ஜூன் 2010

என் திருக்குறள் சந்தேகமும், இளையராஜாவின் உரையும்…

இது எனக்கு போறாத காலமா, இல்லை உங்களுக்கெல்லாம்மான்னு எனக்கு தெரியவில்லை.
ஆனா, என் பல நாள் சந்தேகங்கள் தீர்கின்றன / உறுதி பெறுகின்றன.

நான் பாட்டுக்கும், தேமேன்னு சந்தேகத்த என்னோட வச்சிக்கிட்டுதாங்க இருந்தேன்.
ஆனா, பாருங்க; அப்பத்தான் கொஞ்ச நாளு அத மறந்திருந்தேன், ஆனா ஏதோ ஒரு போரம்ல அதே சந்தேகத்த யாரோ கிளப்பிவிட்டு, நியாபகப்படுத்துனாங்க.

சரி, அந்த போரத்துலயாவது சந்தேகம் தீரும்னு பாத்தா அது வள்ளுவர் கொண்டையாட்டம் உறுதியானது தான் மிச்சம்.

டவுட், இதானுங்க.
as usual, திருக்குறள்ல.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
(குறள் 110, அறத்துப்பால் – இல்லறவியல் – செய்ந்நன்றி அறிதல்)‌

இதுக்கு, எந்நன்றி அப்படீன்னா ‍எத்தனையோ வக நன்றி / நன்மை இருக்கு, அதுல எந்த வக
நன்றி / நன்மையாக இருந்தாலும் அதையெல்லாம் அழித்தவர்க்கு/மறந்தவர்க்கும் உண்டாம் உய்வு (அதாவது மன்னிப்பு / நல்வழி).

ஆனால், ஒருவர் செய்த நன்றி / நன்மையை மறந்த மகற்கு (அதாவது மக்களுக்கு) மன்னிப்பே / நல்வழியே கிடையாது. அப்பட்டீன்னு தான் (கிட்டதட்ட) எல்லாரும் சொல்லி வர்றாங்க.

நன்றியோ/ நன்மையோங்கிறதே ஒருத்தவங்க அடுத்தவங்களுக்கு செஞ்சாத்தான் உண்டு. தனக்குத்தானே செஞ்சிக்கிறதப்பத்தி பேச என்ன இருக்கு, இல்லையா.

அப்ப எங்கயோ பொருள் இடிக்குது.
இதுதாங்க என் பல நாள் டவுட்.

உற்றவன்…… குறள் மாதிரி இதுக்கு எனக்கு பொருள் உணர முடியல.
போரத்துலயும் விட கிடைக்கல.

ஆனா, அதிர்ஷ்ட வசமா, விட புலவர் முத்துலிங்கம் பேட்டி (திரும்பிப் பார்க்கிறேன், ஜெயா டிவி) வழியா கிடச்சது.

நம்ம, இளையராஜாவுக்கும் இதே டவுட் இருந்திருக்கு.
(ஹ…ஹ…டவுட்டாலஜில இப்ப நம்ம ரேன்ஜ் தெரியிதுங்களா)

புலவர கேட்டதுக்கு, “எனக்கு தெரியலயே”ன்னு சொல்லிட்டாராம்.

அப்புறம், இளையராஜாவே சொன்ன விளக்கம் என்னாண்ணா,
” நன்றிங்கிறதே அடுத்தவங்க செய்யிறது தான்.
இந்த குறள்ல “மகற்கு”ங்கிறத மக்கள்னு பொருள் பாக்குறப்ப,
நாட்டு மக்கள்னு பொருள் கொள்ளாம வீட்டு மக்கள் (அதாவது பிள்ளைகள்)
அப்படீன்னு பொருள் கொள்ளனும்.

இப்படி பாத்தா,
எந்த வக நன்றி / நன்மையாக இருந்தாலும் அதையெல்லாம் அழித்தவர்க்கு/மறந்தவர்க்கும் உண்டாம் ம‌ன்னிப்பு / நல்வழி. ஆனால், தன்னை பெற்று, வளர்த்த பெற்றோர் தனக்கு செய்த நன்றியை / நன்மையை மறந்த பிள்ளைகளுக்கு மன்னிப்போ / நல்வழியோ கிடையாது.”
அப்படீன்னு விளக்குனாராம்.

இதப்பத்தி நம்ம மயிலை மன்னார் அய்யாவுக்கு என்ன படுதுன்னு திரு. VSK அவர்கள‌ முதல்ல கேட்டிருவோம்.

இல்லறவியல்ல இந்த குறள் வர்றனால இந்த interpretation, ஏத்துக்கொள்ளப்படக்கூடியது தான்னு எனக்கும் படுது.

உங்களுக்கு என்ன படுது.

(ஏண்டா படுத்துறன்னா….?)

(Picture courtesy: http://www.nallpro.com/tamil/att1/ilayaraja.jpg)

ப்ரியா,……வெட்கப்பட்டாள்

“இப்ப அவ காலேஜ் பஸ்ல வந்துகிட்டிருக்காளாம். நம்ம ஸ்டாப்புல அவ இறங்குனதும் நீயா போய் அவகிட்ட பேசுறயா இல்ல, அவளே வந்து பேசணுமான்னு ப்ரியா கேக்குறா”.

பேசுறதெல்லாம் பேச்சாகாதுங்க‌.
அடுத்தவன் கதைய கேட்டு சும்மா பொறாமபடாதீங்க‌.
பேச்சவச்சித்தான் ஒவ்வொருத்தருடைய‌ வாழ்க்கையே நகருது.
அதுனாலதான் எல்லா டீலிங்கும் எல்லாராலயும் பண்ணமுடியறதில்ல‌.

பேசுறதபத்தி வள்ளுவர் சொன்ன குறளுக்கு உர என்னான்னா,…
(வேணாம், மயிலை மன்னார சும்மா, சும்மா டிரபுள் பண்ணக்கூடாது.)

இப்ப என் கதைய கேளுங்க….

அது, ஒரு அழகிய UG காலம்.

ப்ரியா, எங்க காலனி பொண்ணு.
ப்ரியா = ஈகோ : சேட்ட.
(அதென்னமோ, ப்ரியான்னு பேரு இருக்குற பொண்ணுங்க எல்லாம் சேட்டகாரிங்களாத்தான் இருக்காங்க, எனக்கு தெரிஞ்ச வரைக்கும்.)

காலனியில நிறைய பசங்க கார்ட், ரோஸோட அவ பின்னாடி சுத்துனாங்க. எங்க குருப்புல என்னத்தவுற எல்லாரும் அவகிட்ட பிலிம் விட பாத்து, தோத்தவனுங்க. ஆனா, அவ விட்ட நக்கல்ல எல்லா பயல்களும் தலைவி(தி)யேன்னு சரண்டர் ஆயிட்டாங்க‌‌.

நாங்க இருந்த தெருவில தான், அவ வீடு. அதுவுமில்லாம, எங்க குருப்பு பசங்க ரெண்டு பேரு, காலேஜ்ல அவ லேப் பார்ட்னர்ஸ். இவனுங்க நல்ல பேரு வாங்குறதுக்காக போட்டி போட்டு அந்த தெய்வத்துக்கு சமமா உண்ம பேசுனதுல; எங்க கொள்ளுத்தாத்தாங்க கம்மங்காட்டுக்கு போனதுல இருந்து இன்னைக்கு எவனுக்கு கான்ஸ்டிபேஸன் பிரச்சன இருந்தது வர, அவ எங்களபத்தி up to date ஆ இருப்பா.

காலனி பேக்கரில எங்க குருப்பு இருக்குறத பாத்து அவ வந்தான்னா,
நா அந்த இடத்தவிட்டு எப்படியும் எஸ்ஸாயிருவேன்.

நா அவகிட்ட பேசாததுக்கு ஒரு காரணம் இருந்திச்சு.

ஏதோ ஒரு ரிட்டையர்ட் பாட்டிக்கு ஒரு நாள் நா ஹெல்ப் பண்ண, அத பாத்து காலனியே என்ன யோக்கியன்னு என் பெர்மிஸன் இல்லாம, அவுட்ரைட்டா declare பண்ணிருச்சு. காலனியே, “யோக்கியன் கம் ஹியர், யோக்கியன் சாப்டாச்சா”னு என்கிட்ட பேசாததுதான் கொறச்சல்.
ஒரு நாள், என் காதுல படணும்னே மொக்க பிகர் ஒருத்தி, ப்ரியாட்ட, “இது சரியான அம்மாஞ்சிடி”ன்னு கமெண்ட் வேற அடிச்சி சிரிச்சா…….

இந்த காலகட்டத்துல, உண்மவிளம்பிங்கள்ள ஒருத்தன் என் கவித/கத நோட்ட‌ ஒரு நாளு எடுத்துகிட்டு போய், ப்ரியாகிட்ட கொடுத்திட்டான். எங்க நாம மாட்டுணோம்னா “இதெல்லாம் கவிதயா/கதையா. கவிதையில என்னா feelingsuuuuu”ன்னு பப்ளிக்ல ரேக்கு ரேக்குனு ரேக்கிடுவாளோன்ற பயம் தான், எனக்கு.

இப்படி நா பம்மிக்கிட்டு எஸ்கேப்பாகிட்டிருக்க, ஆனா, அவ என்னடான்னா,”இவ்ளோ நல்லா எழுதுறான்”, (அது என் கவித/கதய சொன்னாளா இல்ல ‌கையெழுத்த சொன்னாளோ), “எவ்வளவு அமைதியானவனா இருக்கான். Nice person” நு எதையோ சொல்ல, குருப்பு முழுசும் over night ல‌ சூனியம் வச்ச ஷாஜகான் “விஜய்” மாதிரி ஆகிட்டானுங்க.

அதோட ரிஸல்ட் தான் ஓப்பனிங்ல வந்த வார்னிங்/ஆர்ட்ர்.

எப்படியும் இந்த பேக்கரி வாசல்ல நம்ம மானத்த அவ வாங்க போறான்றது, confirmed. சேட்டக்காரி; அவளா வந்து பேசுனா, damage ஜாஸ்தியா இருக்கும். Risk எடுத்து நாமளே பேசிருவோம்னு முடிவு பண்ணேன்.
ஆனா, என்னத்த பேசுறது?
அதான் தெரியல.

உண்மவிளம்பிங்கள தெரியாம கேக்கப்போய், “ஒரு பேப்பர்ல குத்திட்டானுங்களேனு காலைலயிருந்து கடுப்புல இருக்கோம்….”னு அவனுங்க பைக் வீல எத்துனானுங்க. அவனுங்களுக்கு exam result பிரச்சன.

என்ன பேசுறதுன்னு வேற யோசிக்குறதுக்குள்ள,
அந்த பாழாப்போன காலேஜ் பஸ் வேற‌ வந்துரிச்சு.
முத ஆளா அவ இறங்கி, நேரா என்ன பாத்து வர ஆரம்பிச்சிட்டா…..

“பேசுடா, பேசுடா”னு கூட இருந்தவனுங்க உசுப்பேத்துற விட அரண்டு கிடக்குற உள்மனசு படபடக்க; அவள பாத்து, “ப்ரியா….”னு கொஞ்சம் சத்தமாவே கத்திட்டேன்.

அந்த கணம் அவ முகத்துல ஆயிரம் பரவசம், பூரிப்பு, பெரும, சந்தோசம், வெட்கம் (என்ன!!!!!! இவளுக்கு வெக்கப்படத்தெரியுமா????) தெரிஞ்சது. ஆனா, சத்தம் கொஞ்சம் ஜாஸ்தியா போனதுல, whole college bus, bakery, bus stopநு எல்லாரும் எங்களயே பாக்க ஆரம்பிச்சிட்டாங்க.

“அடப்பாவி, யோக்கியன் மாதிரி இருந்தவனா இவன்னு”, எங்க காலனி ஆளுங்க மொறைக்குறதப்பாத்து இன்னும் நா டென்ஷனாக‌,
“ஐயய்யோ, கூப்டுட்டோம், ஆனா அடுத்து என்ன பேசணும்ன்னு யோசிக்கலையே. சொதப்பிடாதடான்னு” உள்மனசு extraவா இன்னும் மிரட்ட,
இந்த குழப்பத்துல volumeம reduce பண்ணாம அப்படியே துணிஞ்சி
பேசிட்டேன், கத்திட்டேன்…….

“ப்ரியா, ரிசல்ட் வந்திருச்சில்ல, எத்தன அரியரு……..”

//பேச்சவச்சித்தான் ஒவ்வொருத்தருடைய‌ வாழ்க்கையே நகருது.
அதுனாலதான் எல்லா டீலிங்கும் எல்லாராலயும் பண்ணமுடியறதில்ல‌.//

(Picture courtesy: inspeech.net/Scholarship/default.aspx)

திருக்குறள்,….தொடரும் சந்தேகங்கள்; (தமிழய்யாவின் சதியா…?)

(திருக்குறள்ல சொன்னது நர்ஸையா, கம்பவுண்டரயா….? என்ற எனது இடுகையின் தொடர்ச்சி)

இந்த அடிப்பொடியானுக்கு திருக்குறள்ல வந்த சந்தேகத்துக்கெல்லாம் நீங்களும் உங்க நண்பர்களும் மெனக்கெட்டுதுக்கு நன்றிங்க.
ரொம்ப மெனக்கெட்ட திரு. VSK & மயிலை மன்னார் அவர்களுக்கும்
ரொம்ப ரொம்ப நன்றிங்க.

ஆனா எனக்குதான் குழப்பம் விட்டபாடில்ல. அதுனால தொடர்றேன்.
எனக்கு இப்ப திரு. VSK & மயிலை மன்னாரை (அட நீங்களும்தாங்க) விட்டா வேற கதி இல்லீங்க.

அதுனால இந்த குறள் சம்ம‌ந்தமா எனக்கிருக்குற எல்லா சந்தேகத்தையும் கேட்டுர்றேங்க.

1. “உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து” குறள்ல கடைசியா வர்ற மருந்து,
practice of medicine, பொருள் படும்னா, அப்ப இந்த குறள்
practice of medicine க்கு introduction மாதிரி ஆகுது.
அந்த மாதிரி வர்றப்ப, மருந்துங்குற அதிகாரத்துல
இது தானே முதல் குறளா வரணும்னு ஒரு சந்தேகங்க‌.

இத விட்டுட்டு,
“மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று”, ங்குறது முதலா இருக்கே.

2. மருந்து அப்படீங்கற அதிகாரத்துல தான இந்த குறளே வருது. அப்ப,
“உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே ” அப்படின்னு முடிச்சாலே பொருள் வெளங்கிடுமே.

இல்லன்னா, அப்பால்ங்குற வார்த்த இல்லாம ……
“உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
நாற்கூற்றே மருந்து”னு
சொன்னாலும், இதுவர பெரியவங்க சொல்ற பொருள் வந்திருதே…….

ஐயன் அவசியமில்லாம வார்த்தய உபயோகப்படுத்தமாட்டாருன்னு
எல்லோரும் நம்புறனால தான் இப்படி அனத்துறேங்க.

3. மருந்துங்குற அதிகாரத்துல வள்ளுவர் அய்யா, முடிஞ்சவரைக்கும்
ஔஷதத்த ஒதுக்கியே தான் வைக்கிறாருன்னு நினைக்கிறேன்.

ஔஷதத்த பத்தி உயர்வா ஒரு குறள் கூட இந்த அதிகாரத்துல இல்ல.

மேலும், “மருந்தென வேண்டாவாம்” அப்படீன்னு பொட்டுல அடிச்ச மாதிரிவேற சொல்லாடியிருக்காரு. அதுனாலயும் தான் எனக்கு குழப்பம் வந்ததுங்க.

இப்ப இந்த 3 பாயிண்டையும் படிச்சபொறவு,

“நோயாளி, வைத்தியரு, மருந்த கொடுக்குறவரு இவங்க மூணு பேரும் வரிசைபடி தங்களுடைய கடமைய குறையில்லாம செய்யிறப்பத்தான், இவற்றையெல்லாம் கடந்து, மருந்துங்குறதே நாலாவதா வந்து தன் வேலய சரியா செஞ்சி சிகிச்சய முழுமையாக்கும்”.

அப்படீங்குற உரை ஏற்புடையதா, இல்லையான்னு சொல்லுங்க ?

தொடர்ந்து சங்கடம் கொடுக்குறதுக்கு மன்னிக்கணும்.

(“டேய், உன்ன யார்றா இப்படியெல்லாம் யோசிக்க சொல்றது”ன்னு டென்ஷனாவுரவங்க, என்ன உட்டுருங்க. கட்டுர முழுக்க “சீதை”ய “சிதை”ன்னு எழுதிவச்சாலும், கோபப்படாம, பொறுமையா எடுத்து சொல்லி, பரிவோட தமிழ் பாடம் எடுத்து, என்ன மாதிரி தத்தாரிங்கயெல்லாம் பாஸாகுற அளவுக்கு முன்னேத்திவிட்ட எங்க பள்ளிக்கூட தமிழய்யாட்ட‌ போய் நியாயம் கேளுங்க. )

சாப்பாட்டு ஆர்வலரா நீங்க….? ரூபாய் ஆயிரத்துக்கு ஆசையா*

வாழ்த்துக்கள். நல்லா சாப்புடுற ஆளா நீங்க‌, சந்தோஷபட வேண்டிய விஷயம் தான்.
அந்த சாப்பாட்டு பத்திதான் இப்ப கேள்வியே.

அடுத்து வர பத்து கேள்வியில எத்தன கேள்விக்கு
கரெக்ட்டா பதில் சொல்றீங்கன்னு பாப்போம்.
இங்க‌ ஆண், பெண், வயசு பாகுபாடெல்லாம் இல்ல.
இந்த கேள்விங்களுக்கு சரியான பதிலா 10/10 வாங்குங்க,
ரூபாய் ஆயிரத்துக்கு ஆசப்படுங்க‌*.

1. அஸ்கா சக்கரை எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?

2. சேமியாவின் மூலப்பொருள் எது?

3. ஜவ்வரிசி மாவு எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
அ. கோதுமை
ஆ. மக்காசோளம்
இ. குச்சிக்கிழங்கு
ஈ. உருளைக்கிழங்கு

4. பருப்புவடை/மசால்வடை/ஆமவடை செய்ய தேவையான பருப்பு எது?
அ. கடலைபருப்பு
ஆ. உளுத்தம்பருப்பு
இ. பாசிப்பருப்பு
ஈ. துவரம்பருப்பு

5. பாசி பயறு/ பச்சைப்பயறுக்கும் பயத்தம் பருப்புக்கும் என்னா relation?

6. ஆழாக்கு படி என்றால் எத்தனை படி அளவு?

7. அப்பளம் செய்ய உபயோகப்படுத்தப்படும் மாவு,…………

8. ராகியின் தமிழ் பெயர் என்ன….?

9. கம்பு. இந்த தானியத்த ஆங்கிலத்துல என்னா சொல்றது?

10. ஆரஞ்சு பழத்த விட 5 மடங்கு அதிகமா vitamin C இருக்குறது எந்த‌ பழத்துல‌ ( நம்ம ஊர்ல பரவலா கிடைக்கிற‌து) ?

சரியான விடைகள்:
1. கரும்புச்சாறுதேய்ங்
2. கோதுமை
3. விடை: இ
4. விடை: அ
5. தோல் நீக்கப்பட்ட பயறு, பருப்பாகிறது.
6. 1/8 படி
7. உளுந்து
8. கேப்பை / கேழ்வரகு
9. Pearl millet
10. கொய்யால (அடிங்க, வார்த்தைக்கு முன்னடி “ங்” சேக்காத).

இப்ப 10/10 வாங்குனவங்கெல்லாம் கைய தூக்குங்க.
* உங்களுக்கெல்லாம் ஒவ்வொருத்தருக்கும் தலா ரூபாய் ஆயிரம் வேணுமா?
ஆச, தோச. “ஆசையா”, “ஆசப்படுங்க”ன்னு தான் சொன்னேன்.
கிடைக்கும், தர்றேன்னு சொல்லலையே.
ஹி…ஹி….ஹி….

திருக்குறள்ல சொன்னது நர்ஸையா, கம்பவுண்டரயா….?

அண்ணே, அண்ணே, எனக்கு வெகு நாளா ஒரு சந்தேகம்ணே…..

எதுலடா….?

திருக்குறள்லதேய்ங்…

பேஷ், பேஷ். அந்த ரேஞ்சுக்கு டெவலப் ஆகிட்டயாடா கண்ணா, நீ…!
OK. proceed. what is your doubt?

திருக்குறள் எண் 950, அதிகாரம் ‍ மருந்து, பால் பொருட்பால்….

டேய், Stop. நான் என்ன சென்ஸஸ் எடுக்க வந்த ஆளா?
கண்ட விவரம் எல்லாம் எனக்கெதுக்கு.
குறள சொல்லு, கேள்விய கேளு.‌

அண்ணே, அதுல வள்ளுவர் என்ன சொல்றார்ன்னா…
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து

இப்ப என்ன இதுக்கு உனக்கு உரை என்னான்னு தெரியணூமா?
kural.muthu.org, போ,
thirukkural.com போ, எல்லார் உரையும் அதுல இருக்கு.

அதில்லதாண்ணே சந்தேகம்.
இந்த குறளுக்கு
கலைஞர் உரை:
நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது.
மு.வ உரை:
நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.
சாலமன் பாப்பையா உரை:
நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும்.
English Explanation:
Medical science consists of four parts, viz., patient, physician, medicine and compounder; and each of these (again) contains four sub-divisions (Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis )

இதுல பாத்தீங்கண்ணா, எல்லாருமே மருத்துவமுறை நாலு வகையாக அமைந்துள்ளதுன்னு சொல்றாங்க.
ஆனா, அந்த நாலாவது வகை கம்பௌன்டர்ன்னு ஒரு சாரரும், நர்ஸம்மான்னு ஒரு சாரரும் பொருள் வர்ற மாதிரி சொல்றாங்களே.
அந்த நாலாவது வக எதுண்ணே…?

அடேய், இப்பத்தான் விஞ்ஞானம் டெவலப்பாயிருச்சி.
அந்த காலத்துல ஏது கம்பௌன்டரு, ஏது நர்ஸம்மாங்க.
முன்னாடி காலத்துல வைத்தியர் கூடவே வர்றவரு மருந்த அரச்சி தருவாரு.
அவர கம்பௌன்டருன்னு சொன்னா அப்ப வீட்ல பக்கத்துல இருந்து கவனிச்சிக்குற ஆளையா நர்ஸுன்னு சொல்றது.
மருந்த வேளாவேளைக்கு சரியான அளவுல சரியான பதத்துல யார் நோயாளிக்கு கொடுக்குறாங்களோ அவங்க தான் அந்த நாலாவது வக.

என்னமோ சொல்றீங்கண்ணே, ஆனா எனக்கென்ன்மோ இந்த நாலு உரையுமே தப்புன்னு தோணுது.

ஏண்டா திருக்குறள்லயே தப்பு, ரைட்டுன்னு சொல்ற அளவுக்கு நீ வந்துட்டயா. சொல்றா என்ன தப்பு?

அண்ணே,
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து,
ங்குற குறள்ல இவங்க எல்லாரும் உற்றவன், தீர்ப்பான், மருந்து, உழைச்செல்வான்னு பிரிச்சி படிக்குறாங்க.
அப்பிடி படிச்சா அப்பால் நாற்கூற்றே ங்கிறதோட மேட்டர் முடிஞ்சிச்சு.
மருந்து ங்கிற வார்த்த எக்ஸ்டிரா ஆகுது.
அப்படியில்லாம உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று,
அப்பால் ‍ அதாவது அதற்கு அடுத்து, அதை கடந்து
நாற்கூற்றே மருந்து ‍‍‍‍‍ நாலாவது வகையே மருந்து.
நோயாளி, வைத்தியரு, மருந்த கொடுக்குறவரு இவங்க மூணு பேரும் வரிசைபடி தங்களுடைய கடமைய குறையில்லாம செய்யிறப்பத்தான்
மருந்துங்குறதே நாலாவதா வந்து தன் வேலய சரியா செஞ்சி சிகிச்சய முழுமையாக்கும்.
இப்படியும் சொல்லலாம்ணே.

என்ன சொல்லலாம், கொல்லலாம். போடா வெட்டிப்பயலே,
அப்புடியே பஸ் ஏறி கோயமுத்தூர் போ.
ரொம்ப பேர் கூட்டம் கூட்டமா வந்திருப்பாங்க.
அங்க போய் சத்தம் போட்டு இத சொல்லு, நல்லா வெளங்க வப்பாங்க.

சரி சரி டென்ஷனாகாதீங்கண்ணே. ஒரு சிம்பிள் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க.
இந்த குறளுக்கு
போப் அய்யா உர மாதிரியேதான் பாப்பைய்யா அய்யா உர இருக்கு.
மு.வ ‌அய்யா உர மாதிரியேதான் கலைஞர் அய்யா உர இருக்கு.
பெருசா வித்தியாசம் இல்லயே. அப்புறம் ஏண்ணே இவங்களும் ….?

அண்ணே அண்ணே ஓடாதீங்கண்ணே,
பதில் சொல்லிட்டு போங்கண்ணே….
பதில் சொல்லிட்டு போங்கண்ணே…
……….

இந்த இடுக ரொம்ப மொக்கத்தனமா இருந்தாலும்,
இந்த குறளக்கு இப்படியும் பொருள் சொல்லலாமான்னு
உண்மையிலேயே ஒரு சந்தேகம் இருக்கு, எனக்கு.

தமிழ் ஆர்வலர்களும், தமிழ் பெரியவங்களும் கொஞ்சம்
இந்த அடிப்பொடியானுக்கு கருத்து சொன்னா நல்லாயிருக்கும்….

(Picture courtesy: http://www.indiaglitz.com)

ஒரு கொலையை பார்த்த மதியம்…

மதியங்கள், ஊருக்குள் பெரும்பாலும் வெறுமையானவை, சுவாரசியமற்றவை. (கள்ளக்காதலர்கள் மன்னிக்க…)

ஊரை பற்றிய‌ நினைவுகள் தாயை பற்றிய நினைவுகள் போல. ஊரை பற்றிய பேச்சுக்களும், அவ்வாறே. “போ, போ நீ ஒரு பிள்ள பொறக்கவேயில்லன்னு நினச்சிக்கிறேன்”என்று தாயும் “போ, போ ஊருக்குள்ள நீ ஒருத்தி தான் சுமந்தியா” என்று பிள்ளையும் சண்டையிட்டுக்கொள்ளாத வீடு உலகத்தில் இல்லை. சண்டையிட்டு கொள்வதும் விட்டுக்கொடுப்பதும் சமாதானமாகி சேர்வதும்தான் வாழ்க்கை என்பதை தாய்‍‍பிள்ளை உறவில் தெரிந்துகொள்ளாதவர்கள் அதிகப்படியாக சண்டையிட்டு, வீடு துறந்து சமுதாயகுப்பைகளாகிறாகள். சமுதாயகுப்பைகளாக மாறி தன் பிள்ளையை குறைசொல்லும் தாய்மார்கள் உண்டெனினும் சமுதாயகுப்பைகளாக மாறி தன் தாயை குறைசொல்லும் பிள்ளைகளை தேடவேண்டும்.

ஒரு விடுமுறை நாளின் பின் மதியத்தில், ஊரை கிழித்துச்செல்லும் ஓடையை இல்லை சாக்கடையை சிறு கூட்டம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. அந்த வயதில் கூட்டம் எதற்காக இருந்தாலும் அதில் முன்னே நிற்பது வீரத்தின் வெளிப்பாடு. சாக்கடை ஓடைக்கு பல அடிகள் முன்னே கூட்டம் நின்றது. ஆர்வத்தில் முன்னே மேலும் ஒரு அடி வைத்தபோது ஒரு கை தலைமுடியை பற்றி பின் இழுத்து கூட்டத்தோடு நிறுத்தியது.

கூட்டத்தின் முன் நின்று பார்த்த போது….

ஓடையில் ஒருவன் கிடந்தான். என் போன்ற சிறுவர்களுக்கு பரிச்சயம் இல்லாதவன்; உடலில் பல வெட்டுக்களோடு. சினிமா தந்த சிற்றறிவினால், அவனை யாரோ சிலர் விரட்டி வந்து வெட்டியிருக்கின்றனர் என்று யூகிக்க முடிந்தது. உயிர்வெறி அன்றி அந்த சாக்கடை ஓடையில், இறங்கத்துணியும் காரணம் யூகிக்க முடியவில்லை.

சாக்கடையில் இருந்த ஓர் திட்டிற்கு தவள முயன்றான். தோற்றான். இரண்டு கால்களின் பின்தொடைகளும் கிழிந்து, இடது கை மணிகட்டு தோலினால் மட்டும் உடலோடு ஒட்டிக்கொண்டிருக்க, தலையிலிருந்து வழியும் ரத்தம் உறையாமல் கழுவிச்சென்ற ஓடை நீரை செம்மையாக்கிக்கொண்டிருந்தது.

பின்னால், மெதுவாக கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது; பரிச்சயமில்லா ஒர் அமைதியுடன். தலையில் தட்டி அவ்வப்போது “போ” என்று செய்கை செய்தனர் சிலர், வார்த்தை விடுத்து . சிறுவர்கள் இது போன்ற கோரங்களை பார்க்கவேண்டாம் என்று அக்கறை கொண்டனரோ அல்லது இவ்விடத்தில் இவர் தம் பகுத்தறிவு துளிர் விடவேண்டா என எண்ணினரோ.

சாக்கடையில் கிடந்தவன் அவ்வப்போது, ஹக்….ஹக்… என்ற சத்தத்துடன் சீரான இடைவெளியில் துடித்துக்கொண்டிருந்தான். பல ஆண்டுகளுக்குப்பின் வெளிவந்த சுப்ரமணியபுரம் என்ற படத்தில், சீட்டு கிளப்பில் கொலைசெய்யப்படும் ஒருவன் துடித்து அடங்குவதை சில வினாடிகள் திரையில் பார்த்து, வன்முறை அதிகமாக இருக்கு என்று உச்சு கொட்டியிருப்பீர்கள். வினாடிகள் அல்ல, நிமிடங்கள் அல்ல, மணி நேரங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம், அன்று.

கட்டுப்படுத்த யாரும் இல்லை, ஆனால் சேரும் எல்லோருமே சேர்த்தனர், காத்தனர் அந்த அமைதியை. கையாலாகாத்தனம் வாரி, வளைத்து, நெருக்கி, இறுக்கும் போது அழுத்தமான அமைதி சுயதிணிப்பாகிறது.

கால் மணி, அரை மணி என்ற துண்டுகள் மறைந்து முழு மணி நேரங்கள் கடந்தன.
“வாங்கய்யா, ஆஸ்பித்திரிக்கு தூக்கிட்டு போவோம்…”, என்ற வாசகம் இறுதி வரை ஏக்கமாக முடிந்தது, என‌க்கும். படங்களில் பார்த்தது போல் பொலிஸ் வரும் என்ற எதிர்பார்ப்பு எப்போது மறைந்ததோ. வேடிக்கை எண்ணமும் கறைந்து போய், எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களாய், பசியோடு உடல் சோர்வும் சேர, கூடிய கூட்டத்தின் கால் வழி உள்புகுந்து, வெளிவந்தபோது சூரியன் மறைந்திருந்தது.

தன் பிள்ளைகளின் தயையை எதிர் நோக்கி வாழும், அவர்தம் செயல்களின் மேல் ஆளுமையற்ற, ஒர் குரூபக் கிழவி தான் வாழும் திண்ணையில் அமர்ந்தபடி கூட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் தனக்குத்தானே ஏதோ புலம்பிக்கொண்டிருந்தாள் என்று தோணியது.

பின்விளைவுகளை பற்றி எண்ணாது, அடுத்தவரின் அவசரத்திற்கும், ஆபத்திற்கும் வரிந்துகட்டி கொண்டு கிளம்பும் பிள்ளைகளை தட்டி கொடுக்கும் தாய் இருக்கும் வரை எந்த பிள்ளையும் தைரியசாலி தான். “உனக்கேன்…”, என்ற அவளின் ஒற்றை சொல்லோடுதான் ஒவ்வொறு தெருவும் ஒவ்வொறு ஊரும் மனிதம் இழக்கிறது; மயானம் நகரினுள் விஸ்தரிக்கிறது.

சொந்த ஊரின் பெருமைகள் தாயின் பெருமைகள் போல். என்ன சொல்ல…..

வியர்வைப்பூ பூத்த மதியம்…..

விடுமுறை நாட்களை விட பள்ளி நாட்களின் மதியங்கள் ரசமானவை.

பள்ளி திண்ணையில் அடுக்கப்படும் சத்துணவின் வாசனை, ஜன்னல் வழி தெரிவிக்கும் மதிய இடைவேளைக்கு சில நிமிடங்களே என்று. உணவு இடைவேளையில் உணவுண்ணும் காலம் குறைவானதே. குறைவானது உணவுண்ணும் காலம், நிறைவானது உணவின் சுவை.

அபூர்வமாய் வரும் கறி சோற்றுடனோ, கோழி குழம்புடனோ தவறாது உடன் இருக்கும் சில “கரி”த்துண்டுகள்‍‍, வரும் வழியில் பேயோ, பிசாசோ உணவை திருடி தின்பதை தடுத்த அசதியில். தயிர் சோறா, பழைய சோறா யார் கண்டது வேற்றுமையை. ஆளுக்கு ஒரு கை.

தூக்குவாளியை கழுவுகிறேன், தட்டை கழுவுகிறேன் என்று பள்ளிக்கூட குழாயிலோ, அருகில் இருக்கும் கை பம்பிலோ, கிணற்றடியிலோ தண்ணீரில் ஆடிய ஆட்டத்தின் நினைவுகள் இன்றும் ஈரமானவை. “டேய், கொண்டாடா உனக்கு ஒழுங்காவே கழுவ தெரியாது. நான் தான் கழுவி தருவேன்”, என்று தட்டை வெடுக்கென்று பிடுங்கும் வசந்தியும், “டேய், ப்ளீஸ்டா. எனக்கான்டி தண்ணி அடிச்சிக்கொடுடா”, என புன்னகைத்து கெஞ்சும் ப்ரீயாவும் கடைசிவரை சொல்லாமலே விட்டுச்சென்ற உணர்வுகள் இன்று வரை சரியாக புரிந்து கொள்ளப்படாத ஏக்கங்களே. பெண் பிள்ளைகள் சீக்கிரமே மனமுதிர்ச்சி அடைகின்றனர் என்ற உண்மை அறியாமலேயே அந்த பருவம் கடந்து செல்கிறது. அவர்கள் பார்த்துக்கொண்டேயிருக்க “நா எறிபந்தாட போறேன். பொண்ணுங்கயெல்லாம் அதுக்கு சேத்தி யில்ல” என்ற வாக்கியமே இன்று வரை நினைவிற்கு வரும் முதல் ஆணாதிக்க வெளிப்பாடு. ‌

கிட்டிப்புல், கோலி போன்ற ஆட்டங்களும், வாத்தியார்களின் கழுகு கண்களுக்கு தப்பி அவ்வப்போது அரங்கேறும். இப்பமே ஒரு வீட்டுப்பாடத்த எழுதி முடிச்சா, போற வழியில இன்னும் ரொம்ப நேரம் ஆலஊஞ்சல் ஆடலாமே என்ற திட்டங்களும் ஒரு மனதாக நிறைவேறும்.

உணவு இடைவேளை முடிந்து வகுப்பு ஆரம்பமாகும் மணியடிக்க‌, வகுப்பின் உள் நுழைய ஆசிரியரோடு இடும் போட்டி பரம்பரைகள் கடந்தும் தொடரும் சம்பிரதாயம். அவசரமாய் இடம் தேடி அமர்ந்து புத்தகம் விரிக்கையில், ஜன்னல் வழி வரும் வேப்பமர தென்றல் காற்று, வேர்வைப்பூமாலை துடைத்து, ஆசுவாசப்படுத்தி, இதம் அளிக்கும்; சமயத்தில் இதம் தாண்டி தாலாட்டும்.

மதிய உணவு இடைவேளை நேரத்தை, அரிதாக, தவறவிட்டு தாமதமாக வந்து கை வலிக்க டப்பாவை தட்டிக்கொண்டிருக்கும் ஐஸ் வண்டிகாரனும், மதிய இன்டர்வெலிலாவது மிஞ்சியிருக்கும் வெம்பிய மாம்பிஞ்சுகளையும், காய்ந்த சீனிக்கிழங்கையும், பனங்கிழங்கையும் விற்று விட காத்திருக்கும் கிழவியும், எப்போதும் பீடி வாடை அடிக்க சற்று தள்ளி அமர்ந்திருக்கும் லக்கி பிரைஸ்காரனும், பல ஆண்டுகள் தினசரி பார்த்திருந்தும் சுயபரிச்சயமின்றி காரியக்கார உற‌வுகளாகவே தொடர்ந்தது,…….ஏன்?

இத்தனை ஆண்டுகளுக்குப்பின் ஒவ்வொரு முறையும் பயணத்தின் போது ஏதேனும் ஒரு கிராமத்து பள்ளியை க‌டந்துபோகையில் நியாபகத்திற்கு வரும் இவர்களின் நினைவில் பள்ளிக்குச் செல்லும் சிறார்களை இன்று காண்கையில் என்ன வரும் நியாபகத்திற்கு.