தட்டச்சு பழகுகிறேன்…

அங்கிட்டு..இங்கிட்டு..போறப்ப..வாறப்ப..timepass..பண்ண‌

Tag Archives: இனியாவது விழித்துகொள்வோ

ராகிங், என்ற பகடி வதை…?!?

யூனிவர்சிட்டியில சேரும் போதே ஒரு முடிவோட‌ இருந்தேன். ராகிங்ல என்ன கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டாலும் அத தவறாது நிறைவேற்றிவிடுவதுன்னு.

“பாட்டு பாடு”

“டான்ஸ் ஆடு”

“இவன அடி”

“தோப்புக்கரணம் போடு”

“தரையில படுத்து நீச்சல் அடி”

“தீக்குச்சிய வச்சி அளந்து காட்டு”

“இந்தா, தம் அடி”

“சரக்கு அடி”

இப்டி எல்லாமே, சின்னபுள்ளத்தனமா தான் இருந்திச்சு. ஏற்கனவே வடிவேலு மாதிரி மையிண்ட் செட் ஏற்படுத்திக்கிட்டனால, என்ன சொன்னாலும் செஞ்சேன், எவ்வளவு அடிச்சாலும், வாங்கிகிட்டு ஈஈஈஈஈன்னு பல்ல காட்னேன்.

ஏண்டா உனக்கு சொரணயே இல்லையான்னு, கேக்காதீங்க….

இப்படி ஒரு ஜூனியர்வாச்சா, எப்பிடி இருக்கும் சீனியர்க்கு; ஒரே வாரத்துல, “சீ, உன்ன யார்ரா ராகிங் பண்ணுவா”ன்னு காரி துப்பிட்டு மத்தவனுங்கள மேயிக்க போயிட்டானுங்க.

அப்பாடா எல்லாரையும் சமாளிச்சாச்சுன்னு சந்தோசம சுத்துனேன்.

கிட்டதட்ட ஒரு மாசத்துக்கு அப்புறம் தான் முக்கியமான 3 பேர்கிட்ட மாட்னேன்.
இவனுங்க கிட்ட மாட்டுனதுக்கு தினைக்கும் மூணுவேள அடி வாங்கலாம்.

மொத ஆளு:
இந்த சீனியர் அடிக்கவோ, திட்டவோ மாட்டான். ஆளு பொன்னம்பலத்துக்கு பங்காளி மாதிரி இருப்பான். லேசா தொண்டய செருமுனா போதும், டர் ஆயிரும்.
சனிக்கிழம, ஞாயித்திகிழம இவன் ரூமுக்கு இழுத்திட்டு போயி ஒரு முலையில நிறுத்தீருவான். அவ்ளோ தான்.
 
அவன் பாட்டுக்கும் அவன் வேலய பாத்துகிட்டிருப்பான் (பயபுள்ள பாடபுஸ்தகத்த படிப்பாங்க, கோவில் குருக்களாட்டம், முணுமுணுன்னு). ரூம்ல, பாட்டு பாடாது, போஸ்டர் கூட இருக்காது. அந்த ரூமுக்கு வர்றவனுகளும் நம்மள கண்டுக்க மாட்டாங்க (அப்புறம் நம்ம எதுக்கு அங்கனகுள்ள‌). ராத்திரி 11 மணிக்குத்தான் ரிலீஸ் பண்ணுவான்.

அவ்ளோ நேரமும் சும்மா நின்னுகிட்டே இருக்கணும், பேசக்கூட தடா. (ஈஸியா தெரியிதா, ஒரு நா நின்னுபாத்து, சொல்லுங்க). ஆனா, மதியம் சாப்புட நல்லா வாங்கி தருவான்; பிரியாணி, நான்வெஜ்ன்னு (பெரிய, வள்ளலாட்டம்). அதுக்கப்புறமும் நிக்கணும், எப்டி முடியும். கண்ணு சொருகும், தூக்கம் அழுத்தும். அந்நேரம் பாத்து பாசமா ஒரு ஸ்மைல் பண்ணுவான் பாருங்க……. “டேய், ரெண்டு அடியாவது அடிச்சிட்டு விட்றா”னு மனசு கெஞ்சும்.

ரெண்டாவது ஆளூ:
இவனோடதும் (அ)கிம்ச தான். ராத்திரி மெஸ்ல‌தான் இவன் ஆள் புடிப்பான். பக்கத்துல உக்காந்து பாசமா ஆரம்பிச்சி, கொஞ்ச கொஞ்சமா மிரட்டுவான். எதுக்கா? தயிர் சாதம் திங்க சொல்லி. மெஸ்ல டெய்லி ராத்திரி தயிர்சாதம், அன்லிமிடெட். அதுக்காக, எவ்ளோ சாப்ட முடியும். கொஞ்ச நேரத்துல வயிறு கிழிஞ்சிருமோன்ற நெலம வந்தபொறகு தான், சாப்பாட்ட நிறுத்த விடுவான். அதுக்கப்புறம் தான் அவன் சாப்பிட ஆரம்பிப்பான். அவன் முடிக்கிறதுக்குள்ள, இங்க மேல்வயிறு, கீழ்வயிறு எல்லாம் நிரம்பி, அடி வயிறு நெருக்கும் பாருங்க, மரண அவஸ்தங்குறது அதான் (காமன் டாய்லட்டுக்கு க்யூல நிக்காதவங்களுக்கெல்லாம் இது சொன்னா புரியாது).

அவன் கைய கழுவுனதுலயிருந்து அஞ்சு நிமிசம் தான் டைம். “எல்லாத்தையும் முடிச்சிகிட்டு”, நம்ம புஸ்தகத்த தூக்கிகிட்டு அவன் ரூம்ல ஆஜர் ஆகணும்.
“படி தம்பி, படி”ன்னு அவனுக்கு தூக்கம் வர்றவரைக்கும் நம்மள படிக்க சொல்லி உசுரவாங்குவான். (பெத்தவங்க படின்னு சொன்னதையே கேக்காம உருப்படாம போனவங்க நாம. நம்மள பாத்து எப்படி சொல்லலாம் அவன், “படி”ங்கிற கெட்ட வார்த்தய).

படிச்சிட்டேன்னு சொன்னா, பதில் சொல்ல முடியாத கேள்வியாகேட்டு, மறுபடியும் படிக்க சொல்லுவான்.  “படிக்கதான தம்பி வந்த, படிப்பா தம்பி”ன்னு அரைமணிக்கு ஒரு அட்வைஸ் வேற. இதுல வயிறு நெறய இருக்குற தயிர்சாதத்தோட எபெக்ட், ஸ்ஸ்ஸ் அப்பா, நெனச்சாலே கண்ண கட்டுது.

எப்படியும் மூணு மணிக்குத்தான் ரிலீஸ் பண்ணுவான். அதுக்கப்புறம், எங்க தூங்குறது. கொட்டாவி சத்தமும் கோழி கூவுற சத்தமும் ஒண்ணா இருக்கும்.
இது ஒரு  நா கத இல்ல. ஒருத்தன புடிச்சான்னா, தொடர்ந்து ரெண்டு வாரத்துக்கு, அவன் விடமாட்டேன். இந்த பொழப்புக்கு, “செருப்பால கூட நாலு அடி அடிச்சிட்டு போடான்னு இருக்கும்”.

வீட்லயிருந்து ஃபோன் வந்தப்ப இவனுகள பத்தி கம்ளெயிண்ட் பண்ணா, எதிர் மொனையில தெருவே சிரிக்குது, speaker phone புண்ணியத்துல. எக்ஸ்ட்ராவா அட்வைஸ் வேற. “ஏண்டா, சும்மா நிக்க சொல்றதையும், நல்லா சாப்புடவோ இல்ல படிக்க சொல்றதையும் கம்ளெயிண்ட் பண்ற. நல்ல பசங்களா இருக்காங்க, அவனுக கூட சேந்து, அப்டியாவது படிச்சி உருப்படு.”

முணாவது ஆளூ:
இவன் மத்தவங்கள மாதிரி நாள் கணக்குல‌, வார கணக்குல படுத்த மாட்டான்.
ஒரு நாளைக்கு பத்து பசங்க தான், அதுவும் அவன் கண்ல சிக்குற முதல் பத்து பேருக்குத்தான் அந்த பாக்கியம். மாலை நேரங்களில் ஹாஸ்டல் வாசல்ல நிப்பான். (ஹாஸ்டல் யுனிவர்சிட்டியின் மெயின் கேட்டுக்கு செல்லும் பாதையில் இருந்தது. அதாவது, நம்மள தாண்டி தான் சாயங்காலம் யாரும் வெளிய போக முடியும்).

1. சட்டய கழட்டி inside outஆ மாட்டிக்கோ.
“எஸ் ஸார்”
2. பேன்ட்ட கழட்டி inside outஆ மாட்டிக்கோ.
“எஸ் ஸார்” (அறுனாகொடிக்கு நன்றி‌)
3. பனியன் எங்கடா? சட்டைக்கு மேல மாட்டு.
“எஸ் ஸார்”
4. இப்ப எல்லாரோட வாட்சையும் கழட்டி வரிசைல முதல்ல நிக்கிறவன் ரெண்டு கைலயும் மாட்டு
“எஸ் ஸார்”
5. இந்த டைம்பீஸ அவன் நெத்தியில மாட்டு
“எஸ் ஸார்”
6. நீ, இப்ப கார் ஓட்டு (சின்னபுள்ளைல வெளான்டிருப்பமே, பசங்க படத்துல வர்ற மாதிரி)
“எஸ் ஸார்”

7. அப்டியே போயி அவகிட்ட (அந்த நேரத்தில எந்த பொண்ணு வந்துகிட்டிருக்கோ) டைம் மேனஜ்மென்ட் பத்தி ஒரு நிமிஷம் லெக்சர் கொடுத்திட்டு, இந்த பேப்பர்ல “you are simply superb”ந்னு எழுதி அவ ஸைன் வாங்கிட்டு வா.

சாயங்காலம் வீட்டுக்கு போற மகராசி, எவ நின்னு டைம் மேனஜ்மென்ட் பத்தி லெக்சர் கேப்பா, அதுவும் சூப்பர்மேன்கிட்ட. “அக்கா, சீனியர், மேடம்”னு கெஞ்சிகிட்டே போகணும்.

சில புண்ணியவதிங்க வேணும்னே மெயின் கேட் வரைக்கும் இழுத்தடிப்பாங்க. (ஒருவேள நம்மள அந்த கெட்டப்புல இன்னும் நெறய நேரம் பாக்கணும்ங்ற ஆசையாக்கூட இருந்திருக்கலாம் :‍))).

எது எப்படியோ. நல்ல வேள, அப்பெல்லாம் கேமரா மொபைல் கெடயாது :‍‍‍)

ஆனா, அடுத்த வருசம் ஜூனியர்கள எல்லாம் வரிசையா
நிக்க வச்சி,
நிக்க வச்சி,
நிக்க வச்சி…..
(ஓண்ணும் செய்ய முடியலங்க. ஆன்டி ராகிங் ரூல்ஸ் ஸ்டிரிக்டா இம்பிளிம்ன்ட் பண்ட்டாங்க‌)

Picture courtesy: http://www.tribuneindia.com/2006/20060718/delhi.htm

வரதட்சணை,….கொடுமை !?!

இனி பொறுக்க முடியாதுங்க.

நானும் பாத்துக்கிட்டே இருக்கேன், இந்த பிரச்சனைக்கு யாரும் ஒரு counter கொடுக்குற மாதிரி தெரியல. அட பொண்ணுங்கள இந்த விசயத்துல நம்ப முடியாது, உண்ம தான். ஆனா இந்த பசங்க. ம்ஹூம், வேஸ்ட் ஃபெளோஸ்.

ஆனா, நான் மானஸ்தன்ய்யா.
விடமாட்டேன்.

பிரச்சன இது தாங்க, எந்த ஆல மரத்தடியில வரதட்சண பத்தி கூட்டம் போட்டாலும், உடனே இந்த பொண்ணுங்க, ” நாங்க பணம் கொடுத்து பையன வாங்குறோம்”, அதாக்கும், இதாக்கும்னு வரதட்சண கொடுக்குறத பத்தி ஓவரா சவுண்ட் விட வேண்டியது.

வரதட்சண கொடுத்துட்டா அதுக்காக எந்நேரமும் தலையில தூக்கிவச்சிக்கிட்டு ஆடணுமா, என்ன.

(Excuse me பொண்டாட்டி மேடம். கொஞ்சம் என் தலையுல இருந்து ஒரு நிமிசம் கீழ இறங்குனீங்கன்னா, கழுத்துல சொடக்கெடுத்துப்பேன். Thank you, பொண்டாட்டி மேடம்.)

நான் மானஸ்தன்ய்யா.
நான் இதுக்கு ஒரு பதில கண்டுபுடிக்காம விடமாட்டேன்.

பகல் முழுக்க‌ பரங்கிமல மேல மல்லாக்கா படுத்து யோசிச்சேன்.
இராத்திரி முழுக்க முக்காடு போட்டு உக்காந்து யோசிச்சேன்.

அஃக, புடிச்சோம்ல……counteru…

குடும்பங்குற institutionல மெரிட்ல அட்மிசன் கெடைக்காம management quotaல captitation feeச கட்டி அட்மிட் ஆகுற ஆளுங்கய்யா இவங்க. என்ன தான் captitation fees கட்டுனாலும், institution சொல்றபடி obedientட்டா இருந்தாதான் உருப்பட முடியும். அத விட்டுட்டு சும்மா, capitation fees கொடுத்தேன், வரதட்சண‌ கொடுத்தேன்னு கூவுனா,…

எப்பூடி…

இனி பல்லுமேல நாக்க போட்டு,
மெரிட்ல குவாலிஃபையாகமுடியாத இந்த பொண்ணுங்க
ஆம்புளைங்கள பாத்து எதுனா சவுண்ட் விட்டா,
பொறுக்க மாட்டான் இந்த மானஸ்தன்.

ஹா….ஹா…ஹா…..

(ஐய்யோ….ஐயோ…ஐய்யோ
உணர்ச்சிவசப்பட்டேனே உணர்ச்சிவசப்பட்டேனே.

ஏற்கனவே கட காத்து வாங்குது,
இதுல தப்பித்தவறி இந்த பக்கம் வர்ற தாய்குலங்களும்
இத பாத்தா டென்ஷனாயிடுமே.

ஆ..ஆ…ஆ…பொண்டாட்டி மேடம்,
நீங்க எப்படி இந்த பக்கமா………….
Re-Recording sound….. ணங் ணங் ணங் ணங் ணங் ணங் ணங் ணங் ணங் ணங் )

ப்ளீஸ், உங்க எல்லார்கிட்டயும் ஒரு சுமால் ரெக்குவஸ்ட்டு. ஒரு ரெண்டு வாரத்துக்கு பழைய சாதத்த கழனிப்பானையில ஊத்துறதுக்கு முன்னாடி ஒரு தடவ வாசல் பக்கம் இந்த மானஸ்தன் இருக்கானான்னு ப்ளீஸ் ஒரு எட்டு பாத்துடுங்க………

டிஸ்கி: இது முழுக்க, முழுக்க புனைவு. வெறும் நகைச்சுவைகாக மட்டும்.
(ஆ… உமி வச்சி ஒத்தடம் கொடுத்தும் மண்டையில வீக்கம் வத்தலயே)

Picture without dialouges, courtesy: http://www.chinasmack.com/2008/stories/married-for-1-year-beaten-by-wife-9-times.html

எனக்கு எப்ப கல்யாணம் நடக்கும்….???

கல்யாண வயசு பசங்களா (Boys & girls) நீங்க?
(என்னது முத்துன கத்திரிக்காயா நீங்க;
நோ ப்ராளம், நீங்களும் படிக்கலாம்).

நமக்கு, எப்ப கல்யாணம் நடக்குமோன்னு நீங்க பயந்துகிட்டிருக்குற ஆளா, இல்ல‌
நமக்கு, எப்ப கல்யாணம் நடக்குமோன்னு பெருமூச்சு விடுற டைப்பா,
எதுவா இருந்தாலும் வாங்க உங்க கல்யாணம் எப்ப நடக்கும்ன்னு உடனே தெரிஞ்சிக்கலாம்.

முதல்ல கேள்விக்கெல்லாம் பதுல சொல்லுங்க..
(எத்தனை அ/ஆ/இ தெரிவு செய்றீங்கன்னு கணக்கு வச்சிக்கோங்க‌).

உங்க வயசு என்ன?
அ. 20 -‍ 25
ஆ. 25 – 30
இ. 30 <

உங்க லைஃப் பார்ட்னர் பாக்க எப்படி இருக்கணும்?
அ. சினி ஸ்டார், Page 3 ரேன்ஜ்ல
ஆ. அழகுன்னு சொல்ல முடியாட்டியும், லட்சணமா இருக்கணும்
இ. okன்னு சொல்ல முடியாட்டியும், பயந்து கண்ண மூடிக்கிற அளவுக்கு இல்லாம இருக்கணும்

உங்க லைஃப் பார்ட்னர் எவ்ளோ படிச்சிருக்கணும்?
அ. என்னை விட அதிகமா இல்ல என் அளவாவது
ஆ. எதாவது ஒரு டிகிரி
இ. எழுத படிக்க தெரிஞ்சா போதும்

உங்க லைஃப் பார்ட்னர் எவ்ளோ சம்பாதிக்கணும்?
அ. என்னை விட அதிகமா இல்ல என் அளவாவது
ஆ. என் சம்பளத்தில் அட்லீஸ்ட் 1/3
இ. சம்பாதிப்பது முக்கியமில்லை. பணத்தின் அருமையும், சேமிக்கும் திறமும் போதும்.

உங்க லைஃப் பார்ட்னர் எந்த ஊருல இருக்கணும்?
அ. நான் இருக்கும் ஊரிலேயே
ஆ. நான் இருக்கும் ஸ்டேட்டிலாவது
இ. கிரக்கோஷியானாலும் சரி தான்.

உங்க லைஃப் பார்ட்னர் எதை சேர்ந்தவரா இருக்கணும்?
அ. ஒரே மதம், ஒரே ஜாதி, ஒரே உட்பிரிவு / ஒரே கொள்கை, ஒரே கோஷ்டி
ஆ. ஒரே மதம் / ஜாதி / கொள்கை இருந்தா போதும். உட்பிரிவு, கோஷ்டி பத்தி கவலயில்ல.
இ. எதையும் சேராதவரா இருந்தாலும் ஒகே தான்.

உங்க லைஃப் பார்ட்னரின் நிறம்?
அ. பூமி தொடா பிள்ளையின் பாதம்
ஆ. மத்திம‌ நிறமாவது
இ. திராவிட நிறமே கருப்பு தான்

உங்களுக்கும் உங்க லைஃப் பார்ட்னர்க்கும் வயசு வித்தியாச எதிர்பார்ப்பு
(ம.மகன் வயசு -‍ ம.மகள் வயசு = )?
அ. அதிகபட்சம் 2 ஆண்டுகள் 364 நாட்கள்
ஆ. 6 வருஷம் பெரிய வித்தியாசமில்ல‌
இ. 9 வருஷம் தான, பரவாயில்ல‌

உங்க லைஃப் பார்ட்னரின் குணம் / நடத்தை பற்றிய எதிர்பார்ப்பு?
அ. யோக்கியம் நெம்பர் 1. (தரச்சான்றுடன்)
ஆ. ரொம்ப யோக்கியம்மா யாருமே இருக்கமுடியாது
இ. கல்யாணத்துக்கு அப்புறம் ஒழுங்கா இருந்தா போதும்

வரதட்சணை….
(பெண்கள் இந்த கேள்விக்கான விடைகளை கீழிருந்து மேலாக மாற்றிக்கொள்ளவும்)
அ. As per present market trend
ஆ. பொண்ணு வீடா பாத்து ஏதாவது / என் சகோதரிக்கு செய்த அளவு
இ. மூச்…என்ன பேச்சு சின்னபுள்ளதனமா

முடிவுகள்:

1. மிக அதிகமாக "அ" வை தெரிவு செய்தவர்கள்: உங்களுக்கு நெனப்பு ரொம்ப ஓவரா இருக்கு. கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் உங்களுக்கு கல்யாண ப்ராப்தமே கிடையாது. அதுக்கு முன்னாடி குருட்டு யோகத்துல யாராவது இளிச்சவாய் உங்ககிட்ட ஏமாந்தாதான் உண்டு. ‌முடிஞ்சா திருந்தப்பாருங்க‌.

2. மிக அதிகமாக "ஆ" வை தெரிவு செய்தவர்கள்: உங்களுக்கு நல்ல மனபக்குவம் வர ஆரம்பிச்சிருச்சு. கூடிய சீக்கிரம் வரன் அமஞ்சிடும். முடிஞ்சா "இ" யை, இன்னும் சில கேள்விங்களுக்கு தெரிவு செய்ங்க.

3.மிக அதிகமாக "இ" யை தெரிவு செய்தவர்கள்: என்ன!!!! உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா?????? ஹீம். இந்த அறிவு அஞ்சு வருசம் முன்னடியே இருந்திருந்தா கூட, இப்ப புள்ளய ஸ்கூலுக்கு அனுப்பியிருக்கலாம்ல? வருத்தப்படாதீங்க‌, எல்லா கேள்விக்கும் "இ"யையே தெரிவு செய்ங்க, கல்யாண யோகம் வரும்.

நீதி:

"கல்யாண யோகம்"கிறது பீக் ஹவர்ல வர்ற வண்டி மாதிரி. நம்ம தராதரத்துக்கு ஏத்த மாதிரி டவுண் பஸ்ஸோ, ஆட்டோவோ, டாக்சியோ வர்ற முத வண்டியில ஏறி போயிட்டே இருக்கணும். கூட்டமா இருக்கு, வசதியா இருக்காதுன்னு குத்தம் பாத்துக்கிட்டிருந்தா, அங்கயே நிக்க வேண்டியது தான்.

காலம் போயிட்டே இருக்கும்…..

அதுக்கப்புறம், மொத பஸ்லேயே அட்ஜஸ்ட் பண்ணி போயிருக்கலாம்ன்னு, புத்தி வந்தாலும் பிரயோஜனம் இல்ல.

என் திருக்குறள் சந்தேகமும், இளையராஜாவின் உரையும்…

இது எனக்கு போறாத காலமா, இல்லை உங்களுக்கெல்லாம்மான்னு எனக்கு தெரியவில்லை.
ஆனா, என் பல நாள் சந்தேகங்கள் தீர்கின்றன / உறுதி பெறுகின்றன.

நான் பாட்டுக்கும், தேமேன்னு சந்தேகத்த என்னோட வச்சிக்கிட்டுதாங்க இருந்தேன்.
ஆனா, பாருங்க; அப்பத்தான் கொஞ்ச நாளு அத மறந்திருந்தேன், ஆனா ஏதோ ஒரு போரம்ல அதே சந்தேகத்த யாரோ கிளப்பிவிட்டு, நியாபகப்படுத்துனாங்க.

சரி, அந்த போரத்துலயாவது சந்தேகம் தீரும்னு பாத்தா அது வள்ளுவர் கொண்டையாட்டம் உறுதியானது தான் மிச்சம்.

டவுட், இதானுங்க.
as usual, திருக்குறள்ல.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
(குறள் 110, அறத்துப்பால் – இல்லறவியல் – செய்ந்நன்றி அறிதல்)‌

இதுக்கு, எந்நன்றி அப்படீன்னா ‍எத்தனையோ வக நன்றி / நன்மை இருக்கு, அதுல எந்த வக
நன்றி / நன்மையாக இருந்தாலும் அதையெல்லாம் அழித்தவர்க்கு/மறந்தவர்க்கும் உண்டாம் உய்வு (அதாவது மன்னிப்பு / நல்வழி).

ஆனால், ஒருவர் செய்த நன்றி / நன்மையை மறந்த மகற்கு (அதாவது மக்களுக்கு) மன்னிப்பே / நல்வழியே கிடையாது. அப்பட்டீன்னு தான் (கிட்டதட்ட) எல்லாரும் சொல்லி வர்றாங்க.

நன்றியோ/ நன்மையோங்கிறதே ஒருத்தவங்க அடுத்தவங்களுக்கு செஞ்சாத்தான் உண்டு. தனக்குத்தானே செஞ்சிக்கிறதப்பத்தி பேச என்ன இருக்கு, இல்லையா.

அப்ப எங்கயோ பொருள் இடிக்குது.
இதுதாங்க என் பல நாள் டவுட்.

உற்றவன்…… குறள் மாதிரி இதுக்கு எனக்கு பொருள் உணர முடியல.
போரத்துலயும் விட கிடைக்கல.

ஆனா, அதிர்ஷ்ட வசமா, விட புலவர் முத்துலிங்கம் பேட்டி (திரும்பிப் பார்க்கிறேன், ஜெயா டிவி) வழியா கிடச்சது.

நம்ம, இளையராஜாவுக்கும் இதே டவுட் இருந்திருக்கு.
(ஹ…ஹ…டவுட்டாலஜில இப்ப நம்ம ரேன்ஜ் தெரியிதுங்களா)

புலவர கேட்டதுக்கு, “எனக்கு தெரியலயே”ன்னு சொல்லிட்டாராம்.

அப்புறம், இளையராஜாவே சொன்ன விளக்கம் என்னாண்ணா,
” நன்றிங்கிறதே அடுத்தவங்க செய்யிறது தான்.
இந்த குறள்ல “மகற்கு”ங்கிறத மக்கள்னு பொருள் பாக்குறப்ப,
நாட்டு மக்கள்னு பொருள் கொள்ளாம வீட்டு மக்கள் (அதாவது பிள்ளைகள்)
அப்படீன்னு பொருள் கொள்ளனும்.

இப்படி பாத்தா,
எந்த வக நன்றி / நன்மையாக இருந்தாலும் அதையெல்லாம் அழித்தவர்க்கு/மறந்தவர்க்கும் உண்டாம் ம‌ன்னிப்பு / நல்வழி. ஆனால், தன்னை பெற்று, வளர்த்த பெற்றோர் தனக்கு செய்த நன்றியை / நன்மையை மறந்த பிள்ளைகளுக்கு மன்னிப்போ / நல்வழியோ கிடையாது.”
அப்படீன்னு விளக்குனாராம்.

இதப்பத்தி நம்ம மயிலை மன்னார் அய்யாவுக்கு என்ன படுதுன்னு திரு. VSK அவர்கள‌ முதல்ல கேட்டிருவோம்.

இல்லறவியல்ல இந்த குறள் வர்றனால இந்த interpretation, ஏத்துக்கொள்ளப்படக்கூடியது தான்னு எனக்கும் படுது.

உங்களுக்கு என்ன படுது.

(ஏண்டா படுத்துறன்னா….?)

(Picture courtesy: http://www.nallpro.com/tamil/att1/ilayaraja.jpg)

தாய்ப்பாலை தவிர்க்கலாமா?

தாய்ப்பாலோட சிறப்ப முதல்ல சொல்லிடறேன்.

முதல்ல நானே சிந்திச்சது….

1. இலவசம், இலவசம், இலவசம்.
2. உடனடியாக கிடைக்கும்.
3. 24 X 7 கிடைக்கும்.
4. அப்படியே சாப்பிடலாம்.
5. கலப்படம் இல்லை.
6. உணவே மருந்தாகும்.
7. மிகச்சிறந்த மூலப்பொருட்களின் கலவை.
8. சுத்தமும் சுகாதாரமான தயாரிப்பு.
9. இயற்க்கையான உணவு (ஆர்கானிக்!?)
10. எளிதில் ஜீரணமாகும்.
11. DTC (Direct from manufacturer to consumer).
12. மனம் விரும்பும் Container யில்.
(நான் சொன்னது பாப்பாவின் மனம்.
நீங்களும் என்ன தப்பா நினைக்கல, அதத்தான் நினைச்சீங்கன்னு எனக்கு தெரியும்.)

இப்ப சீரியஸ்ஸா…

1. குழந்தையை தொற்று நோய்களிடம் இருந்து காக்கிறது.

அ) உதாரணத்திற்கு மிகப்பரிச்சயமான டயரியா, ஃப்ளு.
ஆ) தொற்று நோய் தடுப்பு மருந்துகளின் (vaccine) செயல்பாட்டை சிறப்பாக்குகிறது.
இ) செயப்பாட்டு நோய் தடுப்புத்தன்மையை (passive immunity) அளிக்கிறது.
ஈ) Necrotizing enterocolitis (NEC) நோயை கட்டுபடுத்துகிறது. NECயை பெரும்பாலும் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகளிடம் காணலாம்.
உ) மறுபடி, மறுபடியும் தாக்கும் காது மற்றும் நுரையீரல் தொற்று நோய்களிடமிருந்து காக்கிறது.
ஊ) Herpes Simplex (HSV 2) வைரஸிடமிருந்து பாதுகாக்கிறது.
எ) Human respiratory syncytial (RSV) வைரஸிடமிருந்து பாதுகாக்கிறது. மூச்சுக்குழாய்களை தாக்கும் இந்த வைரஸிற்கு தடுப்பு மருந்தே கிடையாது.

2. குழந்தையை உடல் நலக்குறைவிலிருந்து பாதுகாக்கிறது.

அ) wheezing (மூச்சுத்திணறல்)
ஆ) SIDS (Sudden Infant Death Syndrome)யிலிருந்து பாதுகாக்கிறது. SIDS, ஏன், எதனால் ஏற்படுகிறது என்பது இன்னமும் புரியாத புதிர்தான். தூங்கபோட்ட குழந்தை இறந்துகிடக்கும். அதனால் இதை cot death என்றும் சொல்லுவார்கள்.
இ) பொதுவான குழந்தை மரணங்களிலிருந்து, மூன்று ஆண்டு வரை முலைபால் காக்கும்.
ஈ) AIDS. பெற்றோரிடமிருந்து குழந்தைக்கு பரவும் HIV-1 யிலிருந்து.
உ) Gastroesophageal Reflux குறையும். (இதை எதுக்கழிக்கிறது அல்லது ஓங்கரிக்கிறது என்றால் சரியா?)
ஊ) Multiple sclerosis (MS). மூளை, தண்டுவட மரப்பு நோயிலிருந்து பாதுகாக்கிறது. குழந்தையின் மூளை மற்றும் தண்டுவடத்தை தாக்கும் MS, வாலிப வயதிலிருந்துதான் வேலையை காட்ட ஆரம்பிக்கும்.
எ) ஹெர்னியா மற்றும் Cryptorchidismலிருந்து ( விதை பைக்கு விதைகள் இறங்கியிருக்காது).
ஏ) போனஸ். 6 மாதத்திற்கு தாய்ப்பால் கொடுத்தால் 12 மாதங்கள் வரை பாதுகாப்பு ( நிபந்தனைகளுக்கு உட்பட்டு).

3. சொறி, படை நோய் மற்றும் அலர்ஜியின் காரணமாக ஏற்படும் நோய்களிலிருந்து குழந்தையை பாதுகாக்கும்.

4. சிறப்பான வளர்ச்சிக்கு, புத்திகூர்மைக்கு மற்றும் பிறருடன் பழகும் பண்பிற்கு கியாரண்டி ( நிபந்தனைகளுக்கு உட்பட்டு).

5.மேலும், காக்கிறது
அ) பொருந்தாப்பல் அமைப்பு (malocclusion)
ஆ) சர்க்கரை வியாதி
இ) குழந்தையில் வரும் புற்று நோய்
ஈ) குடலழற்சி (Crohn’s disease)
உ) Hodgkin’s Disease …ஒரு வகை புற்று நோய்
ஊ) குழந்தைப் பருவ முடக்கு வாதம் (Juvenile Rheumatoid Arthritis)
போன்ற பலவற்றிலிருந்து.

Recent report:
1. தாய்ப்பாலின் மூலமாக மட்டுமே குழந்தைக்கு 3 (அ) 4 வகை குருத்தணுக்கள் (stem cells) கிடைக்கின்றன.
2. பல நாள் தாய்ப்பால் கொடுத்தால் குழந்தை மந்தமாகும் என்பதும் பொய். மாறாக, குழந்தைக்கு ஆளுமைத்திறன் (leadership quality) அதிகமாகிறது என்றும் நிருபிக்கப்பட்டுள்ளது.

இப்ப பாலூட்டும் அன்னையர்க்கும்:

அ) கிடு கிடுவென எடைகுறைந்து silm mummy, beautiful mummy என ஆவர்.
ஆ) மனக்கலக்கம் (anxiety) குறையும்.
இ) ovarian (முட்டையகம்), uterine (கருப்பை), endometrium (கருப்பை உட்சளிப் படலம்), breast (மார்ப்பு) யில் புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் வெகுவாக குறையும்.
ஈ) osteoporosis (எலும்புப்புரை) சாத்தியங்கள் நான்கு மடங்கு குறையும்.
உ) அடுத்த குழந்தைக்கான கருவுறுதிறன் தாமதமாகும். கொஞ்ச நாள் (வருஷம் இல்ல) ஜாலியா இருங்க.

என்னடா இவன் ப்ளாட்பாரத்துல லேகியம் விக்கிறவனாட்டம், sorry Tvல‌ வர்ற வைத்தியருங்க கணக்கா லிஸ்ட் போடுறானேன்னு சந்தேகப்படாதீங்க. எல்லாத்துக்கும் Reference இருக்கு. புல்லா type அடிக்க முடியல. விரல் வலிக்குது. தாய்ப்பால் கொடுக்க 101 காரணங்களை இங்க போய் படிச்சிக்கோங்க.

மேற்சொன்ன எல்லாவற்றிலுமே தாய்ப்பால், புட்டிபாலைவிட பலமடங்கு சிறந்தது என நிருபிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்சொன்ன எல்லா பலன்களும் தாய்ப்பால் அதிக நாட்கள் கொடுக்க கொடுக்க, பலன்களும் அதிகமாகும்.

உலகம் முழுவதும், குழந்தைக்கு 4 1/2 வயது வரை சந்தோசமாக முலைபால் தரும் அன்னையர்களை பற்றி நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

இப்ப நீங்களே முடிவு பண்ணிக்கோங்க, நீங்களும் உங்க குழந்தையும் எப்படியிருக்கணும்ன்னு…

Acknowledgements: Google images for all images.

காலையில், காணாமல் போன….

எங்கே சென்றன‌ என்று தெரியவில்லை.
பல ஆண்டுகளாய் இருந்தது.
தினமும் இங்கேதான் கண்டோம், அனுபவித்தோம்.
ஆனால், இப்போது காணேம்.
இப்படியும் நடக்கக்கூடுமா என நான் மட்டும் அல்ல
என்னோடு நண்பர்களும் வியக்கின்றனர்.

எங்கள் ஊரைப்பற்றி நீங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அதற்காக அருகில் இருக்கும் பெரு நகரத்தின் பெயர்
சொல்லிச்செல்லும் பழக்கமும் எங்களுக்கு இல்லை.
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே நெசவுத்தொழிலை
நம்பியிருந்த‌ ஒரு முனிசிபல் கார்ப்பரேஷன் தான், எங்கள் ஊர்.

ஊரின் எல்லா தெருக்களும் அதிகாலையிலிருந்தே
மெல்ல மெல்ல சோம்பல் விடுத்து துயில் கலையும்.
பெண்களும் அதிகாலையிலேயே வாசலை
சுத்தம் செய்தால் தான் உண்டு. தாமதமானால்,
துணிகளை நெய்யும் முன், நூலில் பாவு போடுவதற்காக
தெருக்களின் இரு ஓரங்களிலும் ஆதியும் இன்றி அந்தமும் இன்றி
கட்டி விடுவார்கள்.

பெண்கள் வாசல் கூட்டி/பெருக்கி , தெளித்து, கோலமிட்டு முடிக்கும் வரை
திண்ணையில் அமர்ந்து காலாட்டிக்கொண்டிருக்கும் சிறார்களின்
தலையாயிய கடமை, கையில் கொட்டப்பட்ட
கோபால் பல் பொடியோ அல்லது 1431 பயோரியா பொடியையோ
சுவைத்துக்கொண்டிருப்பது தான். பல் தேய்க்கும் கடமையை
முன்னமே செய்தவர்கள் வீட்டின்முன் ஓடும் சாக்கடையில்
காலைக்கடன்களை தீர்த்துக்கொண்டிருப்பார்கள்.

பெண்கள் தங்கள் வேலைகளை பார்த்துக்கொண்டே
இன்றைய கிழமை, நடுச்சாம கோடாங்கியின் வாக்கு,
சாணி தெளிப்பது, எத்தனை புள்ளி கோலமிடுவது
என பேசிக்கொண்டிருக்க; சிறார்களும் நேற்றிரவு
தூங்கும்முன் கேட்ட கதை, தூங்கும் பொழுது ஒண்ணுக்கு விட்டது,
எங்கிருந்தோ வந்த உடுக்கை சத்தம் என பேச்சு நீளும்.

சாக்கடையின் உள்ளேயே வந்து தாக்கும் பன்றிகளிடம் இருந்து
காலைக்கடன்களை பட்டுவாடா செய்துகொண்டிருப்பவர்களை காக்க
அவ்வப்போது கடன் தீர்த்த ஒரு ஆள் காவலுக்கு நிற்பதும் உண்டு.
அனேகமாக இந்த பட்டுவாடாக்கள், பெண்கள் தங்கள்
வாயிற்கடமையை முடித்து, “என்னடா முடிஞ்சிச்சா?” அல்லது
“இருந்தது போதும் வா” என அதட்டும் வரை தொடரும்.

இந்நேரத்தில், அடுத்த தெருவில் உழுந்தங்களி
விற்பனைக்கு தயாராகிக்கொண்டிருக்கும். ஒரு கிழவியும்
அவளின் விதவையான மகளோ/மருமகளோவின் ஜீவனத்திற்கு,
அவர்கள் வீட்டு திண்ணையில் செய்து கொண்டிருந்த
அந்த வியாபாரத்தை தான் நம்பியிருந்தனர்.

களி தயாராகிக்கொண்டிருக்கும் அடுப்பை
தண்ணீர் தெளித்து அணைத்து,
ஈர விரல்களினால் அந்த சாம்பலை தொட்டு,
களிச்சட்டியில் திருநாம பட்டையிட்டு,
வணங்கி, தினமும் விற்பனையை தொடங்குவாள் கிழவி.
கிழவிக்கு ஏதோ நம்பிக்கை. எங்களுக்கும் ஒரு நம்பிக்கை இருந்தது.
அது, வாங்கும் காசுக்கு அவளின் மகளையோ/மருமகளையோ விட
கிழவி எப்போதும் சிறிய உருண்டைகளே தருவாள் என்பது.

ஒரு கையில் நழுவும் டவுசரை இழுத்துக்கொண்டோ,
அல்லது ஒழுகும் மூக்கை துடைத்துக்கொண்டு
மறு கையில் வாழை இலையில் மடித்து தரப்பட்ட
சூடான உருண்டைகளை பத்திரமாக வீடு வந்து சேர்க்க வேண்டும்.
சில சமயங்களில், கல் இடறியதாலோ, கை தவறியோ உழுந்தங்களி
உருண்டைகள் மண் தெருவில் விழுந்துவிடும். அந்த இழப்புகளின்
வேதனையை இன்று வரை வேறு எதுவும் மிஞ்சியதில்லை.

அநேகமாக, விடிந்திருக்கும். இப்போது பாவு போட
ஆரம்பித்திருப்பார்கள். பாவு போட ஆரம்பித்திருந்தால் இனி அதை
அவிழ்க்கும் வரை வீட்டின் உள்ளே, வெளியே சென்று வர
பாதியாக மடங்கித்தான் செல்லவேண்டும்.

இதற்குள் பால்காரனும் வந்து சென்றிருப்பான். அவன்
வந்து சென்ற செய்தியை வாசற்படியில் சொட்டியுள்ள
பால் துளிகள் தெரிவிக்கும். திண்ணையில் அமர்ந்து,
வாங்கி வந்த உருண்டைகளை தின்று கொண்டிருந்தால்
ஒரு சிறிய சொம்பில் கருப்பட்டி காபி வரும். பால்,
பச்சிளம் குழந்தைக்கும், நோயுற்றோருக்கும் மட்டுமே கிட்டும்.
சில நாட்களில், அதுவும் கோடை காலங்களில்
தெருவில் அந்நேரத்தில் பதனீர் வரும்.
உருண்டையோ, காபியோ இல்லாத காலையை பதனீர் ஈடுகட்டும்.

காலைகடனுக்குச் சென்ற ஆண்கள், தோளிலே அன்ட்ராயருடன்
வந்து கொண்டிருப்பார்கள். சிலிர் அதை (பட்டாபட்டி என்றால்
இன்று அனைவருக்கும் தெரியும்) சைக்கிள்
ஹாண்டில் பாரில் போட்டு,
சைக்கிளை தள்ளிக் கொண்டுவருவர்.
குளத்திற்கோ, பம்ப் செட்டிற்கோ குளிக்க சென்ற ஆண்கள்
இடுப்பிலே ஈர வேட்டியும், தோளிலே ஈரத்துண்டும்,
நெற்றியிலே பிள்ளையார் கோயில் விபூதியுமாய்
திரும்பிக்கொண்டிருப்பர்.

டீ கடைக்கு செல்லும் ஜோடியும் அங்கிருந்து வரும் ஜோடியும்
(ஜோடி என்றால் இருவர். இன்று இதன்
அர்த்தம் mixed doubles ஆகி விட்டது),
நடுத்தெருவில் நின்று சிறிது நேரம்
செய்தி ப‌ரிவர்த்தனை செய்து கொள்ளும்.

பாவு போடாத நாட்களில், வீதி வழியே போகும் மாடுகளோ,
பருத்திமார் விற்க வரும் வண்டி மாடுகளோ இடும் சாணி
உடனே அப்புறப்படுத்தப்படும். தெருவில் யார் வீட்டு வாயிலின்
அருகே சாணம் உள்ளதோ அது அவர்களுக்கே சொந்தம்
எனும் புரிதல் ஒப்பந்தமும் சமயத்தில் மீறப்பட்டு அதனால்
ஏற்படும் பெண்களின் வாக்குவாதங்கள்,
டீ கடை செல்லும் ஆண்களால் சமாதானப்படுத்தப்படும்.

இப்போது, இங்கொன்றும் அங்கொன்றுமாய் வீடுகளில்
இருந்து நெசவுத்தறி ஓசை தெருவில் கேட்க ஆரம்பிக்கும்.
அடுத்து, வீதியில் மோர்காரி வரும் வரை சிறிது நேரம் கிட்டும்.
அது வரை கோலிகுண்டோ, பம்பரமோ,
கிட்டிப்புள்ளோ, டயரோ ஆடலாம்.
ஆனால், மோர்காரி விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும்.
ஏதோ அவசரம் போல் கூவிக்கொண்டே ஓடுவாள்.
5 காசுக்கு ஒரு சொம்பு மோர் கிடைக்கும். அதனுடன் சேர்க்கும்,
5 பைசாவிற்கு கிட்டும் ஒரு கரண்டி தயிர் காலையில்
எனாமல் தட்டிலும், மதியம் ஈயத்தூக்கிலும் உள்ள
பழைய சோற்றிற்க்கும் இனிய மனம் சேர்க்கும்.

அடுப்படியில், பாத்திரம் தேய்க்கும் மூலையில்
ஜல்ஜாரி அருகே ஒரு சிமெண்ட் தொட்டியில்
(உண்மையில், சிமெண்ட்டால் செய்த அண்டா அது) இருக்கும்
நீரைக்கொண்டு, அங்கேயே நின்று கொண்டு
சீயக்காய் பொடி / லைப்பாய் சோப்
மணக்க குளிக்கலாம்.

துவட்டிவிட்டு வந்து கொடியில் தொங்கும் பள்ளி சீருடையான
வெள்ள சட்டை, காக்கி டவுசர் மாட்டுமுன், சட்டைக்கு ஊக்கும்,
டவுசரின் பட்டைகள் அறுந்து விடும் நிலையிலும் உள்ளனவா என உறுதி படுத்திக்கொள்ளுதல் முக்கியம்.
அந்த டவுசர் எங்கள் இடுப்பில் நிற்காது, அந்த பட்டைகளினால்,
எங்கள் தோள்களிலிருந்து தான் தொங்கி மானம் காக்கும்.

பக்கத்து வீட்டு திண்ணையில் இயங்கும்
பெட்டிகடையில் வாங்கிய “மட்ட ஊறுகா”யினால்
காலையில் கிட்டும் பழைய சாதம் சுவைக்கிற‌தா அல்லது
இதனால் அது சுவைக்கிறதா என்ற வியப்பு தினமும் நிகழும்.

ஹார்லிக்ஸ் பாட்டிலில் உள்ள தேங்காயெண்ணயய்
சாதுர்யமாக கையில் ஊற்றி தலையில் தடவி,
எண்ணெய் தோய்ந்த ஆனால் அழுக்கே இல்லாத சீப்பால் சீவி,
பான்ட்ஸ் பொளடரை முகத்தில் அப்பி, சாமி மூலையில் நின்றால்,
நெற்றியில் திருநீர் மற்றும் சாந்து பொட்டு இட்டு, கையில் அவ்வப்போது
ஏதாவது காசு தருவார்கள்; 2 பைசா, 3 பைசா அதிகபட்சமாக 5 பைசா என்று.

பள்ளிப்பையை, பெரும்பாலும் அது VSS ஜவுளி ஸ்டோர்
என சிவப்பு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் பை;
எடுத்துக்கொண்டு வீதியில் நடந்தால்,
இங்கொன்றும் அங்கொன்றுமாய் ரேடியோ ஒலித்தாலும்
பள்ளி வரை பாடல்கள் இடைவிடாது தொடரும்.

பயணம் தொடரத்தொடர விரியும் நட்பு வட்டம்.
ஒவ்வொரு வீட்டிலும் இருந்து பிரத்யோகமாக
தெருவிற்கு வரும் அந்த தறியின் ஒலி
வழி எடுத்துரைக்கும் “நல்லா படிக்கணும்” என்று.

பூக்கடை பஜாரை தாண்டும் போது அதன் பிரத்யோக
ரோஜா, சந்தன‌ம் மற்றும் ஜவ்வாது வாடைகளின் கலவை;
சிமெண்ட் தெருவில் நடக்கையில் வரிசையாக
டீ கடைகளில் இருந்து வரும் டீ மற்றும் வடை வாசனை,
நடைபயணத்தை மேலும் ரசிக்க வைக்கும்.

தெருவோர ஆக்கிரமிப்பில் முளைத்த மன்றங்களின்
உள்ளிருந்து கூட்டத்தோடு தெருவிற்கு வரும் அரசியல்.

பல்வேறு இடங்களில் இருந்து பெற்றோர் துணையின்றி
தானே விரும்பி வரும் பிள்ளைகளை உள்வாங்கி
“அறி”வணைக்கும் அந்த கற்கோவில்.

வீட்டில் கிடத்த காசுக்கு காலை இன்டர்வெல்லில்
மனம் உலகையே விலை பேசத்துடிக்கும்.
(அந்த உலகம்).

இன்று ஒருவன் கலெக்டராய், சிலர் விஞ்ஞானியாய்,
சிலர் ஆராய்ச்சியாளனாய், சிலர் வியாபாரியாய்,
பலர் மருத்துவராய், பொறியியல் வல்லுனராய்
அதே ஊரின், அதே காலைகளில், அதே தெருக்களில்,
ஒவ்வொரு முறை ஊர் போகும் போதும் தேடுகிறோம்.
உன்னால், உங்களால் எங்கள் காலைகள்,
எங்கள் வாழ்க்கைகள் சிறப்புற்றன
என நன்றி சொல்ல…….
காணவில்லை……

உங்கள் ஊரிலேனும் பத்திரமாக உள்ளதா…?

ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் தான், நியாயமா?

இப்படி ஒரு தலைப்ப பார்த்த‌ உடனே, என்னடா இவன் மொளச்சி மூணு இல வுடல,

அதுக்குள்ள இப்படி ஆயிட்டானேன்னு வருத்தப்படாதீங்க.
உங்க ஜூனியரான நான் ஏன் இந்த பதிவ போட்டேங்கிறதுக்கான‌ முக்கிய காரணம் கடைசியில.

சமீபத்தில என்ன பாதிச்ச சம்பவங்கள்ள‌ ஒண்ணு, பெருகி வரும் கருச்சிதைவு.
தினமும் எத்தனையோ பேர் கருகலைப்பு செய்றாங்க‌; அதன் தர்ம நியாங்கள் அவங்களோடது.
ஆனா கல்யாணமானப்புறம் ஒரு கருச்சிதைவுன்னா, பாகுபாடில்லாம‌ மனைவி, கணவன், அவங்க சொந்த பந்தம், friends ந்னு பலருக்கும் வருத்தம் தான். இந்த சிதைவினால அந்த பொண்ணு உடலாலும் ரொம்ப‌ பாதிப்புக்குள்ளாகிறா.

இப்ப பார்த்தீங்கன்னா கருச்சிதைவுக்கான‌ காரணங்கள் அனேகம். அதுல‌ பலது இன்னைக்கு நடைமுறை வாழ்க்கையில தவிர்க்க முடியாதது (pollution மாதிரி). இருந்தாலும் தவிர்க்க வேண்டிய 2 மட்டும் இங்கே.

மாறி வர்ற‌ கலாச்சாரத்தில கல்யாணம் கட்டிக்கிற சமயத்திலோ இல்ல கல்யாணம் ஆன பிறகோ அம்மணி; லிப் டு லிப் முத்தத்திலும், external affair யில் ஈடுபடாத உன்ன உன் friends, colleagues சிலர் “நாட்டுப்புறம்”ன்னு நக்கல் அடிச்சாலும் பரவாயில்ல. ஏன்னா

1. ஆணும் பெண்ணும் முத்தமிடறப்ப ஏற்படும் எச்சில் பரிவர்த்தனையில, ஆணின் எச்சிலோடு வருது ஒரு பிரத்யோக வஸ்து. இந்த வஸ்தாது என்ன பண்றான்? எந்த reaction நும் கொடுக்காம silent ஆ இருப்பான். இதுல முக்கியமான விசயம் என்னான்னா ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு மாதிரி இருப்பான், இந்த வஸ்தாது. முதல்ல இந்த வஸ்தாத மேலயும் கீழயும் பார்த்து முறைக்கிற பொண்ணேட உடம்பு, தொடர்ந்து வர்ற வஸ்தாதுங்க எல்லாம் ஒரே மாதிரி இருக்கிறப்ப “அட, இவனுங்க நம்ம உறவுக்காரங்க தான்”னு adjust பண்ணிக்கும்.
இப்ப, இதே ஆணால‌ அந்த பொண்ணு கருத்தரிச்சா, பிரச்சன இல்ல. அப்படி இல்லாம முத்ததுக்கு ஒருத்தன், முக்கிய வாழ்க்கைக்கு ஒருத்தன்னா பிரச்சனை தான்.

“சரி, அப்படி அந்த மாதிரி ரெண்டு வக வஸ்தாதுங்க இருந்தா என்ன ஆகும்?” அப்படிங்கறத‌ General knowledgeக்கோசரமாவது நம்ம எல்லோரும் அவசியம் தெரிஞ்சிக்கணும்.
“அப்படியாப்பட்ட சமயத்தில, உருவாகிற‌ கருவ பத்தி கேள்விப்பட்ட உடனே நம்ம வஸ்தாதுங்க, அடியாளுங்க‌ள‌ அனுப்பிச்சிடுவாங்க. இப்ப பெண்ணோட உடம்பு என்ன பண்ணும், இந்த அடியாளுங்ககிட்ட இருந்து கருவ‌ காப்பாத்த பாடுபடும். ஆனாலும் பாருங்க “நம்ம உறவுக்காரங்கன்”னு யாரு ஏற்கனவே recognize ஆகி இருக்காங்களோ அவங்க அடியாளுங்ககிட்ட இருந்து மட்டும் தான் கருவ‌ காப்பாத்த முடியும். “இந்த கருவுக்கும் எங்க ஆளுக்கும் சம்மந்தம் இல்ல”ன்னு கலாட்டா பண்ற அடியாளுங்ககிட்ட இருந்து கருவ காப்பாத்த முடியாம பாவம் பொண்ணேட உடம்பு “கதறி இரத்தமா அழும்”.

2. கிட்டதட்ட இதே மாதிரி பிரச்சனய்ய‌ விந்தணுவும் தட்டிவிடும். இதை ஆரம்பிக்க, Pre-eclampsia /Eclampsia பற்றி முதல்ல. இது ஒரு சாதாரண High BP யாக கர்ப்ப காலத்துல‌ஆரம்பிச்சி, சரியா கவனிக்கலைன்னா short spanல‌ ஆளையே தூக்கிரும். இதுக்கும் பல காரணம் இருக்கு. இந்த சமயத்துல மருந்து கொஞ்சம் dangerous.
சரி இத எப்படி தடுப்பது? Dieting, excercise இந்த‌ மாதிரி? ம்ஹும்.

இப்போதைக்கு better choice, எந்த விந்த‌ணுவால கரு உருவாகணுமோ அதே வகை விந்த‌ணுக்களே தொடர்ந்து அந்த பெண்ணுக்கு கிடைக்கணும். அப்பத்தான் இந்த பிரச்சனையை தடுக்க வாய்ப்புள்ளது. அதுனால தான் இந்த பிரச்சன பெரும்பாலும் முதல் பிரவசத்தில எழும். அதுக்காக முதல் பிரசவம் தான் முடிஞ்சிபோச்சேன்னு சேட்டய ஆரம்பிச்சா புதுசா வர்ற விந்த‌ணுக்களே இந்த பிரச்சனைய மறுபடியும் கிளப்பிவிட்டு அடுத்த கருவமட்டும் இல்லாம அந்த பொண்ணையும் சேர்த்து சமயங்களில் “கொன்று விடும்”.

இப்ப நீங்களே முடிவ சொல்லுங்க.
ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் தான், அப்படிங்கறது
நியாயமா ? அநியாயமா ?

We have lost one of our acquaintance’s wife during pregnancy due to Pre-eclampsia. Though she was modest to her husband, digging the details initiated the formation of this post. THIS POST IS DEDICATED TO THOSE GIRLS AND WOMEN WHO ARE VULNERABLE TO SOME CULTURAL CHANGES THAT COULD BE THEIR LIFE’S DISASTER. THIS POST IS FOR GENERAL AWARENESS AND NOT OF ANY MEDICAL VALUE. FOR BETTER INFORMATION PLEASE CONSULT WITH RESEARCHERS IN IMMUNOLOGY, SPECIALISING IN THE TOPICS OF SALIVA, SEMEN AND ABORTION.

நான் முற்போக்குவாதியோ, பிற்போக்குவாதியோ எனக்கே தெரியாது. ஆனால், இந்த awareness செய்தி எங்கோ, யாரோ ஒரு தோழியையோ அல்லது ஒரு தோழனின் குடும்பத்தையோ காப்பாற்றலாம் என்று நம்பும் ஒரு சாதாரண Junior.